Published : 02 May 2024 10:06 AM
Last Updated : 02 May 2024 10:06 AM
பாஜகவின் எண்ண ஓட்டம் மேற்கு வங்கத்துக்கு பொருந்தாது என முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “மேற்கு வங்க மக்களின் எண்ண ஓட்டமும் பாஜகவினரின் எண்ண ஓட்டமும் முற்றிலும் மாறுபட்டவை. எனவே, பாஜகவின் எண்ண ஓட்டம் மேற்கு வங்கத்துக்கு பொருந்தாது.
நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நிலைநிறுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால், டெல்லியிலிருந்து புலம்பெயர்ந்த பறவைகள் (பாஜக தலைவர்கள்) இதற்கு நேர்மாறாக உள்ளதுடன் மேற்கு வங்கம் குறித்து பொய்களை பரப்பி வருகின்றன” என பதிவிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பேசும்போது, “சமூக நல திட்டங்களுக்கு நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. மேற்குவங்கத்தில் சதி செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவும் அவர்களுடைய தலைவிதியை முடிவு செய்யவும் ஒரு வாய்ப்பாக இந்த தேர்தல் அமையும். மேற்கு வங்கம் இந்த நாட்டுக்கு வழிகாட்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT