Published : 02 May 2024 06:20 AM
Last Updated : 02 May 2024 06:20 AM

வட மற்றும் தென் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு பாகுபாடு பிரச்சினையை தீர்க்க அறிவார்ந்த தலைமை தேவை: ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்

சுப்பாராவ்

புதுடெல்லி: “வட மற்றும் தென் மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு பாகுபாடு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய மற்றும் மாநில அளவில் அறிவார்ந்த தலைமை தேவை” என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அதன் வரி வருவாயில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று 15-வது நிதி ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், மத்திய அரசு 32 சதவீதம் அளவிலேயே நிதியை மாநிலங்களுடன் பகிர்கிறது. தவிர, இந்த நிதிப் பகிர்விலும் சமமின்மை நிலவுகிறது என்ற குற்றச்சாட்டை தென்மாநிலங்கள் முன்வைத்து வருகின்றன.

மத்திய அரசுக்கு தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாயிலும் 29 காசுகள் மட்டுமே திரும்ப வழங்கப்படுகிறது என்ற விமர்சனத்தை தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ளது. அதுவே, உத்தர பிரதேசம் செலுத்தும் 1 ரூபாய்க்கு ரூ.2.73, பிஹாருக்கு ரூ.7.06 நிதிப் பகிர்வாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், நியாயமான முறையில் நிதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து சுப்பாராவ் கூறுகையில், “வட மற்றும் தென் மாநிலங்கள் இடையிலான நிதிப் பகிர்வில் நிலவும் பாகுபாடு, நிதி ஆணையத்துக்கு அப்பாற்பட்டது. இது அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டிய பிரச்சினை. தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற வளர்ந்த மாநிலங்கள் மத்திய அரசுக்கு செலுத்தும் வரியில் குறைந்த அளவே திரும்பப் பெறுகின்றன. பிஹார், உத்தர பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களை மேம்படுத்த அதிக நிதி செலவிடப்படுகிறது.

இந்தியா போன்ற பெரிய, வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட நாட்டில் இது தவிர்க்க முடியாத ஒன்று. ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையும் கூட. ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால், இந்த நிதிப் பகிர்வு முறையில் நாம் எல்லை தாண்டி செயல்படுகிறோமா என்பதுதான். உள்கட்டமைப்பு, தனியார் முதலீடு, சமூக மேம்பாடு, சட்ட ஒழுங்கு சார்ந்து தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாக பல்வேறு தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில் தென்மாநிலங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு குறைந்த நிதிப் பகிர்வை பெற்றுக்கொண்டிருப்பது?

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்கள் அதன் பிரதிநிதித்துவத்தை இழக்கும்.

அறிவார்ந்த தலைமை மூலமே, வட மற்றும் தென் மாநிலங்களுக்கு இடையே அதிகரித்து வரும் விரிசலைத் தடுக்க முடியும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x