Published : 02 May 2024 05:00 AM
Last Updated : 02 May 2024 05:00 AM
சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் தராதது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழத்துக்கு தரவேண்டிய தண்ணீரை, அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என காரணம் கூறி, கர்நாடக அரசு தர மறுத்து வருகிறது.
இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 95-வது கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மே மாதத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய 25 டிஎம்சி நீரை தரும்படி தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், கர்நாடகாவில் வறட்சி நிலவுவதாக கூறி, தண்ணீரை தர கர்நாடகா மறுத்துவிட்டது.
அதே நேரம் ஒழுங்காற்றுக் குழுவும், மே 16-ம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும், அதில் தண்ணீர் விடுவிப்பது குறித்து ஆய்வு செய்யலாம் என கூறிவிட்டது. இதனால், காவிரி நீரை நம்பிய பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மே தின பேரணியில் பங்கேற்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் காவிரி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:
நாங்கள் தண்ணீர் திறந்துவிடுவோம் என்று கர்நாடக அரசு என்றுமே கூறியதில்லை. அதிகமாக தண்ணீர் இருக்கும்போதும், குறைந்த தண்ணீர் இருக்கும்போதும் அவர்கள் அதையே கூறி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் திறந்து விட வேண்டும் என்று கூறியபோதும், திறக்க மாட்டேன் என்று கூறுகிறார்கள். எனவே, மத்திய அரசை கர்நாடக அரசு மதிக்காமல் நடந்து கொள்கிறது. இதை கேள்வி கேட்க வேண்டியது உச்ச நீதிமன்றம். அதை நாங்கள் நாடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தின்போது தமிழக அரசு தரப்பில், ‘‘மே மாதத்தில் வழங்க வேண்டிய 25 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான 2.5 டிஎம்சி நீரையும் கர்நாடகா திறந்துவிட வேண்டும்''என கோரப்பட்டது.
இதற்கு கர்நாடக அரசின் தரப்பில், ‘‘கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டால் கர்நாடகாவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். தற்போதைய சூழலில் நீரை திறந்துவிட இயலாது'' என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு தமிழக அரசின் தரப்பில், ‘‘குறைந்த மழை பொழிவுக் காலங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 5.317 டிஎம்சி நீரையும், மே மாதத்துக்கான 2.5 டிஎம்சி நீரையும் கர்நாடகா திறந்துவிட வேண்டும்'' என வலியுறுத்தப்பட்டது. அதற்கும் கர்நாடக அரசின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா, ‘‘2.5 டிஎம்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கக்கூடிய நிலையில் கர்நாடகாவின் நீர் நிலைமை இல்லை. மே மாதம் இரண்டாவது வாரத்துக்கு பின்னர் அந்த கோரிக்கை குறித்து ஆராயலாம். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அடுத்த கூட்டம் மே 16-ம் தேதி நடைபெறும்'' என தெரிவித்துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT