Published : 25 Apr 2018 02:56 PM
Last Updated : 25 Apr 2018 02:56 PM
2012-ம் ஆண்டு ஜோத்பூர் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி ஜோத்பூர் சிறப்பு எஸ்.சி.,எஸ்.டி. நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆஸ்ராம் பாபு(75). மத்தியப் பிரதேச மாநிலம், சிந்திவாரா பகுதியில் உள்ள ஆசாராம் பாபுவின் மற்றொரு ஆசிரமத்தில் இளம்பெண் ஒருவர் தங்கிப் படித்து வந்தார். இந்தப் பெண் தன்னை சாமியார் ஆசாராம் பாபு பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் செய்தார்.
2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி ஜோத்பூர் ஆஸிரமத்துக்கு வரக்கூறிய ஆசாராம் பாபு தன்னை பலாத்காரம் செய்தார் என்று அந்த இளம்பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆசாராம் பாவுவை கைது செய்தனர். இவர் மீது போக்சோ, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் 31-ம் தேதியில் இருந்து ஆசாராம் பாபு சிறையில் இருந்து வருகிறார்.
சாமியார் ஆசாராம் பாபு, உதவியாளர்கள் சிவா, சில்பி, சரத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது 2013-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி போலீஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கு சிறப்பு எஸ்.சி.,எஸ்.டி. நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, 2017, மே 19-ம்தேதி முதல் இந்த வழக்கில் வாதம் தொடங்கியது.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேற்பார்வையில் நடந்துவந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்துள்ளது. பலாத்கார வழக்கில் அரசு தரப்பில் 44 சாட்சிகளிடமும், சாமியார் தரப்பில் 31 சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்த நிலையில் நிலையில் இன்று நீதிபதி ஜோத்பூர் நீதிமன்றத்துக்கே சென்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நீதிபதி மதுசூதன் சர்மா ஜோத்பூர் சிறைக்கு இன்று காலை சென்று, 16-வயது சிறுமியை பாலத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று அறிவித்தார். தண்டனை விவரங்கள் பிற்பகலில் அறிவிப்படும் என்று அறிவித்துச் சென்றார்.
அதன்படி நீதிபதி மதசூதன் சர்மா பிற்பகலில் தீர்ப்பளித்தார். அதில் 2012-ம் ஆண்டு 16-வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி,எஸ்டி சட்டத்தின்படி சாமியார் ஆஸாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை விதிக்கப்படுகிறது. அவரின் உதவியாளர்கள் சரத், சில்பி ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படுகிறது எனத் தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT