Published : 01 May 2024 01:20 PM
Last Updated : 01 May 2024 01:20 PM

“எனக்கு கூட 5 குழந்தைகள்; ஏன் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்கள்?” - கார்கே கேள்வி

கார்கே

புதுடெல்லி: முஸ்லிம்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு, “இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் அதிக குழந்தைகள் இருக்கிறார்களா?... எனக்கு கூடதான் 5 குழந்தைகள் உண்டு” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர் - சம்பா மாவட்டத்தில் செவ்வாய்க் கிழமை நடந்த தேர்தல் பேரணியில் பேசிய கார்கே, “நாங்கள் பெரும்பான்மை பெறப் போகிறோம். இதன் காரணமாக, அவர் (மோடி) எப்போதும் மாங்கல்யம் மற்றும் முஸ்லிம்களைப் பற்றி பேசி வருகிறார்.

உங்களது செல்வத்தைத் திருடி, அதிகப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுப்போம் என்கிறார். முஸ்லிம்களுக்கு மட்டும்தான் அதிக குழந்தைகள் இருக்கிறார்களா?

எனக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். ஏழைகளுக்குச் செல்வம் இல்லாததால் அதிகமாக குழந்தைகள் உள்ளனர். நீங்கள் ஏன் முஸ்லிம்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்கள்? முஸ்லிம்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்” என்றார்.

இதற்கிடையில், தனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டபோது கொல்லப்பட்ட அவரது தாய் மற்றும் மாமாவின் மரணத்தைப் பற்றி கார்கே கூறினார். அப்போது, “நான் ஒரே மகன் என் வீடு எரிந்தது, எல்லோரும் இறந்துவிட்டார்கள்” என்றார்.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்றார். அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பார்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை.

ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” என்று பேசியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x