Published : 01 May 2024 12:55 PM
Last Updated : 01 May 2024 12:55 PM
புதுடெல்லி: டெல்லியில் உள்ள 50-க்கும் அதிகமான பள்ளிகள் மற்றும் நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று (புதன்கிழமை) மின்னஞ்சலில் மிரட்டல் வந்தததைத் தொடர்ந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். நொய்டா டிஎஸ்பிக்கும் இது போன்ற மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “டெல்லி பப்ளிக் ஸ்கூலின் (டிபிஎஸ்) துவாரகா மற்றும் வசந்த் குஞ்ச் பிரிவுகள், கிழக்கு மயூர் விஹாரில் உள்ள அன்னை மேரி பள்ளி, புஷ்ப விஹாரில் உள்ள அமிதி பள்ளி மற்றும் தென்மேற்கு டெல்லியில் உள்ள டிவிஏ பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்தது.
துவாரகா டிபிஎஸ்-க்கு இன்று காலை 6 மணிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி ஒன்று வந்தது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து டெல்லி போலீஸார், தீயணைப்பு வீரர்கள் குழு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படை சம்பவ இடங்களுக்கு சென்றன. பள்ளி வளாகங்களில் நடத்திய சோதனையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் எந்தப் பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்து.
வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்ததைத் தொடர்ந்து பள்ளிகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர், மாணவர்கள் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோன்ற வெடிகுண்டு சோதனைகள், அன்னை மேரி பள்ளி வளாகம், சன்ஸ்கிரிதி பள்ளி, அமிதி பள்ளி மற்றும் நொய்டா டிபிஎஸ் பள்ளிகளிலும் நடத்தப்பட்டன. நொய்டா டிபிஎஸ் பள்ளியின் தலைமையாசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நொய்டாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மின்னஞ்சலில் மிரட்டல் ஒன்று வந்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக நாங்கள் மாணவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதற்கட்ட விசாரணையில், மின்னஞ்சல் வந்த கணினியின் ஐபி முகவரி இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. விபிஎன் மூலமாக ஐபி முகவரியை மறைக்கலாம் என்று டெல்லி போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து துவாரகா டிசிபி, “பல்வேறு குழுக்கள் சோதனை நடத்தி வருகின்றன. சந்தேகத்துக்கிடமாக எந்தப் பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. மின்னஞ்சல் வந்த ஐபி முகவரி குறித்து விசாரணை நடந்து வருகிறது. இன்று காலையில் மின்னஞ்சல் வந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே டெல்லி அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று காலை சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன. அந்தப்பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, அங்கு டெல்லி போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை அந்தப்பள்ளிகளில் இருந்து சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் போலீஸாருடன் தொடர்பில் இருக்கிறோம். பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. தேவைப்பட்டால் பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோருடன் தொடர்பு கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருப்பது குறித்த விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் முழுமையாக சோதனை நடத்தவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும், அங்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவும் டெல்லி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு பிப்ரவரியில், ஆர்கே புரத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததது. அங்கு போலீஸார் நடத்திய சோதனையில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT