Published : 01 May 2024 09:41 AM
Last Updated : 01 May 2024 09:41 AM

வாராணசி வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக அயோத்தியில் பிரதமர் மோடியின் ஊர்வலம்

உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் 7-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பிரதமர் நரேந்திரமோடி, அயோத்தியில் மே 5-ம் தேதி ‘ரோட் ஷோ’ நடத்த உள்ளார்.

குஜராத்தில் 3 முறை முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உ.பி.யின் வாராணசியில் போட்டியிட்டார். 2019 தேர்தலிலும் வென்ற பிரதமர் மோடி,இந்த முறை அந்தத் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார்.

இம்மாநிலத்தில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கடைசிகட்டமாக வாராணசியில் பிரதமர் மோடி மே 5-க்கு பின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன்பாக மே 5-ம் தேதி அவர் அயோத்தியில் ஒரு பிரம்மாண்டமான ‘ரோட் ஷோ'வை நடத்த உள்ளார்.

கடைசியாக, பிரதமர் மோடி கடந்த ஜனவரி 22 -ல் ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக அயோத்தி வந்திருந்தார். இதற்கும் முன்பாக அவர் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள வால்மீகி விமானநிலையத்தை திறந்து வைக்க கடந்த ஆண்டு டிசம்பர் 30-ல்வந்திருந்தார். அப்போது அவர் விமானநிலையத்தை நோக்கிச் செல்லும் சாலைகளிலும் ஊர்வலமாக வந்திருந்தார். இதற்காக அயோத்தியின் சாலைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடிநின்று பிரதமர் மோடியை வரவேற்று ஆதரவளித்தனர்.

இதையடுத்து ராமரின் தரிசனத்துக்கு பிரதமர் மோடி மே 5 -ல் அயோத்தி வருகிறார். இந்த பிரச்சாரத்துக்காக பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அயோத்திவில் முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ராமர் கோயில் திறப்புக்குப் பின்னர் அதன் அரசியல் பலனை பாஜக மக்களவை தேர்தலில் பெற முயலும் எனக் கருதப்பட்டது. ஆனால், இதுவரையும் முடிந்த இரண்டு தொகுதிகளின் பிரச்சாரங்களிலும் ராமர் கோயில் திறப்பு விழா பெரிதாகப் பேசப்படவில்லை.

தனது எம்பி தொகுதியான வாராணசிக்கு வரும் பிரதமர் அங்கு தங்கி அதைச் சுற்றியுள்ள தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்கு முன்னதாகப் பிரதமர் மோடி, குஜராத், மேற்குவங்க மாநிலங்களில் தலா 2 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். மேலும் ஜார்க்கண்ட் மற்றும் பிஹாரில்நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டங்களிலும் பிரதமர் மோடி பேசுகிறார்.

தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது அவர், குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள ஆளுநர் மாளிகைகளில் தங்குகிறார். இவற்றில் ஜார்க்கண்ட் ஆளுநராக கோயம்புத்தூரை சேர்ந்த தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x