Published : 01 May 2024 09:06 AM
Last Updated : 01 May 2024 09:06 AM
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 19 முதல் 59வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் வரும் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இங்கு ஒரேகட்டமாக மே 13–ம்தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தெலுங்கு தேசம் கூட்டணியின் தேர்தல் அறிக்கை அமராவதியில் நேற்று வெளியிடப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண், பாஜகவின் ஆந்திர மாநிலபொறுப்பாளர் சித்தார்த் நாத் சிங் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கையில் சூப்பர்-6 என்ற பெயரில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் வருமாறு: படித்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 4 லட்சம் வீதம்5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.
வேலை கிடைக்கும் வரை, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். 1-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக அவர்களின் தாயார் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.15,000 செலுத்தப்படும்.
18 முதல் 59 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 3 சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்று சூப்பர் 2.0 என்ற தலைப்பில் பல்வேறு வாக்குறுதிகளை தெலுங்கு தேசம் கூட்டணி அறிவித்துள்ளது. வீடுதோறும் இலவச குடிநீர் குழாய் இணைப்பு, மாநிலம் முழுவதும் திறன் மேம்பாட்டு கல்வி, அனைவருக்கும் இலவசமனைப் பட்டாவுடன் வீடு கட்டித்தருவது, வீடு கட்ட மணல் இலவசம், மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் நிதியுதவி, படகு சீரமைக்க நிதியுதவி, 50 வயதை கடந்த பி.சி. வகுப்பினருக்கு மாதந்தோறும் ரூ.4,000 நிதியுதவி, சட்டப் பேரவையில் பி.சி. வகுப்பினருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, உயர்ஜாதி ஏழைகளுக்கு நிதியுதவி, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவிகளுக்கு உதவித் தொகை, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு, ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அதில் அளிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனதுதேர்தல் அறிக்கையை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT