Published : 01 May 2024 05:16 AM
Last Updated : 01 May 2024 05:16 AM
நாக்பூர்: நாடு முழுவதும் விமான நிலையங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு இடங்களுக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
நாட்டில் உள்ள விமான நிலையங்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) அலுவலகம், கிழக்கு மத்திய ரயில்வே, ஒரு வங்கி, அந்தமானில் உள்ள சுற்றுலா குழுமம், ஒரு வர்த்தக நிறுவனம் மற்றும் சில மருத்துவமனைகளுக்கு ‘666darktriad666@gmail.com’ என்ற இ-மெயில் முகவரியில் இருந்து நேற்று மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளது.
நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 9.27 மணி அளவில் வந்த இ-மெயிலில், ‘‘யாருக்கும் தெரியாமல் வெடிகுண்டு வைத்துள்ளேன். அனைத்து இடங்களும் ரத்தக் கறையாக மாறும். முடிந்த அளவு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
சில விமானங்களில் 3 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்துள்ளோம். இன்னும் சற்று நேரத்தில் அந்த குண்டுகள் வெடிக்கும். இந்த படுகொலையின் பின்னணியில் ‘டெரரசைர்ஸ் 111’ குழு உள்ளது’’ என்று அந்த மெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள 24 விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை சிஐஎஸ்எஃப் படையினர் தீவிரப்படுத்தினர். வெடிகுண்டு நிபுணர்களும் விமான நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மிரட்டல் இ-மெயில் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கும் பணியில் சைபர் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப முகமைகள் ஈடுபட்டுள்ளன. மர்ம நபர்கள் குறும்புத்தனமாக இ-மெயில் அனுப்பி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளதால், அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
சென்னையில் பாதுகாப்பு: கடந்த 26-ம் தேதி கொல்கத்தா விமான நிலையம் உட்பட 4 விமான நிலையங்களுக்கு குண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக 3 அடுக்கு பாதுகாப்பு இருக்கும் நிலையில், குண்டு மிரட்டலை தொடர்ந்து, 5 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டது. அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT