Published : 01 May 2024 07:30 AM
Last Updated : 01 May 2024 07:30 AM
புதுடெல்லி: உ.பி.யில் அகிலேஷ் சிங் யாதவின் மகள் அதிதி சிங் (21) தனது தாய் டிம்பிள் போட்டியிடும் மெயின்புரியில் அவருக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இதன் மூலம் முலாயம் சிங் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை உ.பி. அரசியலில் இறங்கியிருப்பதாக கருதப்படுகிறது.
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியை தொடங்கி அதன் சார்பில் மூன்று முறை ஆட்சியில் இருந்தவர் முலாயம் சிங் யாதவ். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது சகோதரர்கள், மகன்கள், மருமகள்கள் என பலரும் அரசியலில் இறங்கினர். இவர்களில் மகன் அகிலேஷ் சிங் யாதவ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார். உ.பி. முதல்வராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், முலாயம் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக அகிலேஷின் மகள் அதிதி சிங்கும் அரசியலில் இறங்கத் தயாராகிறார்.
அகிலேஷுக்கு மனைவி டிம்பிள் மற்றும் அதிதி, டினா என்ற இரண்டு மகள்களும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். இதில் டிம்பிள் கடந்த 2012-ல் அரசியலில் இறங்கி, கன்னோஜ் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
2014 தேர்தலில் அங்கு மீண்டும் வெற்றி பெற்ற அவர், 2019-ல் தோல்வி அடைந்தார். எனினும் முலாயம் சிங் மறைவுக்கு பிறகு மெயின்புரியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு 2022- ல் எம்.பி. ஆனார். இந்த முறை மீண்டும் மெயின்புரியில் போட்டியிடும் டிம்பிளுக்கு ஆதரவாக அவரது மகள்அதிதி களம் இறங்கியுள்ளார். மெயின்புரியில் அதிதி வீடுதோறும் வாக்கு சேகரித்து வருகிறார்.
இவரது முதல்முறை பிரச்சாரம் குறித்து டிம்பிள் கூறுகையில், “கல்வி விடுமுறையில் இருக்கும் அதிதி எனக்கு உதவி செய்கிறார்.மக்களிடையே பழகி அனைத்தையும் அறிவது அவசியம். அரசியல் அவ்வளவு சாதாரணமானது அல்ல என்பதை அவள் நேரடியாக தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
பத்திரிகையாளர்களுடன் பேசுவதை கவனமாகத் தவிர்க்கும் அதிதி, லண்டனில் கல்வி பயில்கிறார். இவருடன், சமாஜ்வாதி மகளிர் பிரிவின் தேசிய துணைத்தலைவர் நிதி யாதவ் உடன் வருகிறார். இவர்தான், அதிதியை மெயின்புரியில் வீடுதோறும்அழைத்துச் செல்கிறார். தெருமுனை கூட்டங்களிலும் அதிதி மேடை ஏறி, சமாஜ்வாதிக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.
அதிதி வரும் காலத்தில் உ.பி. தேர்தலில் போட்டியிட்டு முழுநேர அரசியலில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு உ.பி.வாசிகளிடம் உள்ளது.
உ.பி.யில் இண்டியா கூட்டணி உறுப்பினராக 62 தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டியிடுகிறது. காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மெயின்புரியில் மே 7-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT