Published : 20 Aug 2014 09:19 AM
Last Updated : 20 Aug 2014 09:19 AM
ஆன்லைனில் ரூ. 300-க்கு டிக்கெட் எடுத்து திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்கும் முறையை புதன்கிழமை முதல் அமல்படுத்து வதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இன்று முதல் ரூ. 300 சிறப்பு கட்டண முறை வெள்ளோட்டமாக அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக திருப்பதி தேவஸ் தான உயர் நிர்வாக அதிகாரி எம்.ஜி கோபால் திருமலையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனையின் பேரில் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் முறையை ஆன் லைனில் அறிமுகப்படுத்த முடிவெடுக் கப்பட்டது. முதல் கட்டமாக 5000 டிக்கெட்டுகளை புதன்கிழமை காலை 9 மணியில் இருந்து ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த பக்தர்கள் 7 நாட்கள் கழித்து, அதாவது வரும் 27-ம் தேதி மதியம் 2 முதல் 3 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்யலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு 2 மணி நேரம் முன்னதாக சம்பந்தப்பட்ட பக்தர்கள் திருமலைக்கு வந்தால் போதுமானது.
முன்பதிவு செய்த பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடையில் மட்டுமே கோயிலுக்கு வரவேண்டும். ஆண்கள் வேட்டி, சட்டை அல்லது பைஜாமா, ஜிப்பா அணிந்திருக்க வேண்டும். பெண்கள், சேலை, பைஜாமா, ஜிப்பா அணிந்திருக்க வேண்டும். ஸ்கர்ட், ஜீன்ஸ் போன்ற உடைகள் அணிந்திருப்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சுடிதார் அணிந்தால் கண்டிப்பாக துப்பாட்டா அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகள் அணிய கூடாது. முன்பதிவு செய்த டிக்கெட்டை இரு பிரதி ஜெராக்ஸ் எடுத்து வரவேண்டும். ஒரிஜினல் அடையாள அட்டையை கண்டிப் பாக எடுத்து கொண்டு வரவேண்டும். எந்த வித பொருட்களும் தரிசன சமயத்தில் அனுமதிக்கப் படமாட்டாது. ஆதலால், செல் போன்கள், உடமைகளை கொண்டு வரக்கூடாது.
12 வயதுக்கு உட்பட்டவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை மாற்றவோ, ரத்து செய்து கொள்ளவோ முடியாது. படிப்படியாக தினமும் 18,000 டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரூ. 50 கட்டண டிக்கெட்டுகள் தினமும் 7000 வரை ஆன்லைனில் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT