Published : 29 Apr 2018 11:57 AM
Last Updated : 29 Apr 2018 11:57 AM
மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்கள் தான் பொருத்தமானவர்கள், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் சரிவரமாட்டார்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கடந்த வாரத்தில் ஏற்கெனவே இருமுறை சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி பாஜகவைத் சேர்ந்த முதல்வர் பிப்லப் தேப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது மூன்றாவது முறையாகும்.
திரிபுரா தலைநகர் அகர்த்தலாவில் சிவில் சர்வீஸ் நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் பிப்லப் தேவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:
''மத்திய அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்கள்தான் பொருத்தமாக இருப்பார்கள், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள் சரிவரமாட்டார்கள். சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்களால்தான் சமூகத்தை கட்டமைக்கத் தெரியும், அவர்களுக்குத்தான் சமூகத்தை கட்டமைக்கும் அறிவு இருக்கிறது. சிவில் இன்ஜினீயரிங் படித்தவர்கள் ஐஏஎஸ் அதிகாரியாக வந்தால், கட்டுமானத்துறை திட்டங்கள் குறித்த நல்ல அறிவு இருக்கும். ஆனால், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு அந்த அறிவு இருக்காது.
அதுமட்டுமல்லாமல், இளைஞர்கள் அரசு வேலைக்காக அரசியல் கட்சிகளின் பின்னர் அலைந்து கொண்டிருக்கக்கூடாது. அது அவர்களின் காலத்தையும், வாழ்க்கையும் வீணாக்கிவிடும். அதற்குப் பதிலாக வெற்றிலை பாக்கு கடை வைத்தால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்'' என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் அகர்த்தலாவில் ஒரு கைத்தறி கண்காட்சியைத் தொடங்கிவைத்து பேசிய முதல்வர் பிப்லப் தேவ், உலக அழகிப்பட்டம் ஐஸ்வர்யா ராய்க்கு கொடுத்தது சரி. ஆனால், டயானா ஹைடனுக்கு ஏன் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என்று பெண்கள் உடலை வர்ணித்துப் பேசியிருந்தார். இவரின் பேச்சு அனைத்துதரப்பினராலும் கண்டனத்துக்குள்ளானது.
சில நாட்களுக்கு முன், மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட், செயற்கைக்கோள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. நாம் இப்போதுதான் அதைப் பற்றி தெரிந்து கொள்கிறோம் என்று முதல்வர் திப்லப் பேசி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT