Published : 30 Apr 2024 07:52 PM
Last Updated : 30 Apr 2024 07:52 PM
புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ, அமலாகத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கான சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, ஜாமீன் வழங்குவதற்கு இது சரியான நேரம் இல்லை என்று கூறி ஜாமீன் மனுவை நிராகரித்தார். மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), அமலாக்கத் துறை மற்றும் மணீஷ் சிசோடியா தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி தீர்ப்பினை ஒத்திவைத்தார்.
டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள புதிய மதுபான கொள்கை மாற்றி அமைக்கப்பட்டபோது, மதுபானம் வழங்க உரிமை பெற்றவர்களுக்கு தேவையில்லாமல் சலுகைகள் வழங்கப்பட்டன, உரிமைத் தொகை ரத்து செய்யப்பட்டன அல்லது குறைக்கப்பட்டன, உரிமை வழங்க தகுதியான அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் உரிமங்கள் நீட்டிக்கப்பட்டன என்று அமலாக்கத் துறையும், மத்திய புலனாய்வு அமைப்பும் குற்றம்சாட்டியுள்ளன.
மேலும், இதனால் பயன் அடைந்தவர்கள் சட்டவிரோதமான ஆதாயங்களை குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு வழங்கினர். அவைகளைக் கண்டுபிடிக்க முடியாத படிக்கு கணக்கு புத்தகங்களில் போலியான கணக்குகளை உருவாக்கினர் என்று புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டப்பட்டுள்ளன.
டெல்லி மதுபான கொள்கையை அமல்படுத்தும்போது அதில் ஊழல் நடத்திருப்பதாக குற்றம்சாட்டிய சிபிஐ அப்போது கலால் துறை அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி கைது செய்தது. சிபிஐ-யின் வழக்கின் அடிப்படையில் பணமோசடி தொடர்பாக 2023 மார்ச் 9-ம் தேதி டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் சிசோடியா கைது செய்யப்பட்டார். மணீஷ் சிசோடியா பிப்.28, 2023-ம் தேதி அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார்.
இதனிடையே, மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT