Published : 30 Apr 2024 02:43 PM
Last Updated : 30 Apr 2024 02:43 PM

சத்தீஸ்கரில் அதிரடி படை என்கவுன்டரில் 7 நக்சல்கள் சுட்டுக் கொலை

காங்கர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் இரண்டு பேர் பெண்கள்.

சத்தீஸ்கரின் நாராயண்பூர் - காங்கர் மாவட்ட எல்லைகளுக்கு நடுவே அமைந்துள்ள அபுஜ்மத் வனப்பகுதியில் தான் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. அபுஜ்மத் வனத்தில் உள்ள டெக்மேட்டா, காக்கூர் கிராமங்களின் அருகில் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 6 மணி அளவில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், நக்சலைட்டுகளுக்கு எதிராக சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினரும் இணைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

நேற்று (ஏப்ரல் 29) இரவு வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதை அறிந்து சிறப்பு அதிரடி படையினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை காக்கூர் கிராமத்தின் அருகே அவர்கள் இருப்பதை கண்டறிந்த அதிரடி படையினர் என்கவுன்டர் செய்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை கைப்பற்றி தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாராயண்பூர் மாவட்ட ஐஜி தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "கொல்லப்பட்டவர்களின் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. மேலும், சம்பவ இடத்தில் இருந்து ஏகே 47 துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன." என்றார்.

நாராயண்பூர் மற்றும் காங்கர் உட்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் நக்சலைட்டுகளை கட்டுக்குள் கொண்டுவர சிறப்பு அதிரடிப் படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு அதிரடிப் படையினர் மேற்கொண்ட என்கவுன்டர்களில் இந்த ஆண்டு இதுவரை 88 நக்சலைட்டுகள் சத்தீஸ்கரில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வயநாட்டிலும் சண்டை: இதற்கிடையே, வயநாட்டில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கம்பமலையில் நக்சலைட்டுகளுக்கும் கேரள அதிரடி படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம், நக்சல்கள் சிலர் கம்பமலையில் வசிக்கும் மலைவாழ் தமிழர்களை வாக்கு செலுத்தக்கூடாது என மிரட்டிச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், நக்சலைட்டுகளை தேடும் பணியில் கேரள அதிரடி படை இறங்கியது.

அதன்படி இன்று (ஏப்ரல் 30) காலை கம்பமலைக்கு அருகில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை கண்டறிந்த அதிரடி படை அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. எனினும், இந்த சண்டையில் யாருக்கும் காயம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x