Published : 30 Apr 2024 01:08 PM
Last Updated : 30 Apr 2024 01:08 PM

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம்

பெங்களூரு: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. இன்று (ஏப்.30) நடந்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவு தொடர்பாக பேசிய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உயர்மட்டக் குழு தலைவர் தேவேகவுடா, "பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இந்த விசாரணை முடியும் வரை அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய எங்கள் கட்சியின் தேசிய தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளோம்." என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், மஜத கட்சித் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி, “சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை முடியும் வரை பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

முன்னதாக, உயர்மட்டக் குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.டி.குமாரசாமி, “எங்கள் குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்க, காங்கிரஸ் செய்த சூழ்ச்சியே இது. எனக்கோ, தேவகவுடாவுக்கோ இதில் எந்தப் பங்கும் இல்லை. இவை எதற்கும் நாங்கள் பொறுப்பல்ல.

இது பிரஜ்வல் ரேவண்ணாவின் தனிப்பட்ட பிரச்சினை. நான் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் தொடர்பில் இல்லை. அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. எனினும், இந்த விவகாரத்தில் தார்மீக ரீதியாக நாங்கள் சில முடிவுகளை எடுக்க முடிவு செய்துள்ளோம். பிரஜ்வல் ரேவண்ணாவை நாங்கள் பாதுகாக்கப் போவதில்லை. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

ஆனாலும், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்துக்கே பொறுப்பு அதிகமாக உள்ளது. நான் அவரின் சித்தப்பாவாக இல்லாமல், நாட்டின் ஒரு சாதாரண மனிதனாக இதில் நடுநிலையோடு இருப்பேன். ஏனென்றால், இது அவமானகாரமான பிரச்சினை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை. இதற்கு முன்பும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக எங்கள் கட்சி போராடியுள்ளது. இப்போதும் அதேபோல் இதனை ஒரு தீவிரமான பிரச்சினையாக பார்க்கிறோம்.

அரசாங்கத்தை யார் நடத்துகிறார்களோ, அவர்கள் தான் இந்த விவகாரத்தில் உண்மையான தகவல்களை அம்பலப்படுத்த வேண்டும். யதார்த்தம் என்னவென்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தவிருக்கிறோம். சிறிதுநேரம் காத்திருங்கள்.” என்று பேசினார்.

பின்னணி: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள‌து. இந்நிலையில் அவரது வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரின்பேரில், தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x