Published : 30 Apr 2024 08:27 AM
Last Updated : 30 Apr 2024 08:27 AM

மத்தியில் ‘ஹங்...’ நாங்கள்தான் ‘கிங்’ - சந்திரசேகர ராவ் நம்பிக்கை

ஹைதராபாத்: மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 200 தொகுதிகள் கூட கிடைக்காது. ஆதலால், கண்டிப்பாக இம்முறை மத்தியில் ‘ஹங்’ (எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலை) வரும். அப்படி வந்தால் நாங்கள் தான் ‘கிங்’ என தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சந்திரசேகர ராவ், பேருந்து யாத்திரையை தொடர்ந்து நடத்தி வருகிறார். வாரங்கல் மாவட்டம், ஹனுமகொண்டாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:

மத்தியில் இம்முறை எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்காது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நாங்கள் தான் கிங். இம்முறை மோடிக்கு 200 சீட் கூட கிடைக்காது. இந்த நிலையில், பிஆர்எஸ் கட்சியை 14 - 15 தொகுதிகளில் வெற்றி பெற செய்தால், குடல் கிழியும் வரை மக்களவையில் கூச்சல் போட்டு மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தருவோம். இப்போது கிருஷ்ணா நீரை, கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு குழுவிடம் ஒப்படைத்து விட்டோம். அதுபோல் கோதாவரி நீரையும் ஒப்படைக்க ஒப்புக்கொள்ள மாட்டோம்.

பாஜகவிற்கு வாக்களித்தால் நாம் இதுபோன்று பல நஷ்டங்களை சந்திக்க வேண்டி வரும். 10 ஆண்டுகளுக்கு முன், கருப்பு பணத்தை மீட்டு ஏழை மக்களின் வங்கி கணக்கில் தலா ரூ. 15 லட்சம் போடுவேன் என மோடி கூறினார். அது என்னவானது ? நம் ரூபாயின் மதிப்பு மிகவும் குறைந்து போனது. 18 லட்சம் மத்திய அரசு பணிகள் காலியாக உள்ளன. அதை ஏன் மோடி நிரப்பவில்லை?

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் தற்போதைய காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வலியுறுத்தினர். அதற்கு, உங்கள் தலைவர் சந்திரசேகர ராவின் கண்ணை பிடுங்கி கோலி ஆடுவேன், குடலை பிடுங்கி மாலையாய் போட்டுக்கொள்வேன், பேண்ட்டை உருவி ஓட விடுவேன் என முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார். இது தான் நாகரிகமா? நான் எப்போதாவது அப்படி பேசினேனா? என்னை சிறைக்கு அனுப்புவதாகவும் முதல்வர் ரேவந்த் கூறியுள்ளார்.

சிறைச்சாலை எனக்கு புதிதல்ல. சிறைக்கு செல்ல நான் பயந்து இருந்தால் தெலங்கானா மாநிலம் வந்திருக்குமா ? தெலங்கானா மாநிலத்திற்காக எத்தனையோ அடிகளை வாங்கி இருக்கிறோம். பல முறை பதவிகளை துச்சமாக மதித்து ராஜினாமா செய்துள்ளோம். பல விதமான போராட்டங்களை நடத்தியுள்ளோம். பல முறை பதவிகளை இடது கால் செருப்பு போல் வீசி விட்டு சென்றுள்ளோம். இதற்கெல்லாம் பயந்திருந்தால் தெலங்கானா வந்திருக்குமா? ரேவந்துக்கு இந்த பிரச்சனையெல்லாம் தெரியாது. இவ்வாறு சந்திரசேகர ராவ் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x