Last Updated : 30 Apr, 2024 04:51 AM

7  

Published : 30 Apr 2024 04:51 AM
Last Updated : 30 Apr 2024 04:51 AM

கர்நாடகாவை உலுக்கிய ஆபாச வீடியோ சர்ச்சை: தேவகவுடாவின் மகன், பேரன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள‌து.

இந்நிலையில் அவரது வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரின்பேரில், தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33), ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கினார். கடந்த 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பல்வேறு பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. ஹாசன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த வீடியோ காட்சிகள் அடங்கிய பென்-டிரைவை வீடு வீடாக காங்கிரஸார் விநியோகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 25 வயது பெண் ஒருவர் பிரஜ்வல் ரேவண்ணா தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்தார். அதன்பேரில், ஹாசன் போலீஸார் அவர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சிலர் ஆன்லைன் மூலமாக போலீஸாருக்கு புகார் அளித்ததால், இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, சிறப்பு புலனாய்வு விசாரணை குழு தலைவர் பி.கே.சிங் தலைமையிலான அதிகாரிகள் ஹாசனுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பிரஜ்வல், ஜெர்மனிக்கு தப்பியோடியதாக கூறப்பட்டது. அதேவேளையில், அவர் சம்பந்தப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு சிக்கியது.

இந்நிலையில் ஹொலேநர்சிப்பூரை சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் நேற்று போலீஸில் புகார் அளித்தார். அதில், ‘‘மஜத எம்எல்ஏ ரேவண்ணாவின் மனைவி பவானிஎனக்கு நெருங்கிய உறவினர். அவர் மூலமாக 2019-ல் இருந்து 5 ஆண்டுகள் ரேவண்ணாவின் வீட்டில் வேலை செய்தேன். அந்த காலக்கட்டத்தில் ரேவண்ணாவும், அவரது மகன் பிரஜ்வலும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். பிரஜ்வல் என் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின்பேரில் ரேவண்ணா, பிரஜ்வல் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 354ஏ, 354டி, 506, 509 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ரேவண்ணா கூறும்போது, ‘‘இதை சட்டப்படி எதிர்கொள்வேன். என் மகன் தொடர்பான வீடியோ எல்லாம் பழையவை. அவரை அரசியலில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதற்காக மார்ஃபிங் செய்யப்பட்டவை'' என்றார்.

இந்நிலையில், ரேவண்ணாவையும், பிரஜ்வலையும் மஜதவில் இருந்து நீக்க வேண்டும் என அக்கட்சியினர் தேவகவுடாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக பெண்களை மோசமாக நடத்திவிட்டதாக காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகளிர் அமைப்பினர் பெங்களூருவில் பிரஜ்வலுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து மஜத மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான‌ குமாரசாமி கூறும்போது, ‘‘இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து தீர்ப்பு வெளியாகட்டும். அதற்குள் யாரும் தீர்ப்பு எழுத கூடாது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் பெண்களை மரியாதையுடன் நடத்தக்கூடியவர்கள்''என்றார்.

முன்பே எச்சரித்த பாஜக பிரமுகர்: பிரஜ்வல் ரேவண்ணா மீதான இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக ஹாசன் தொகுதியில் உலா வந்தது. கடந்த 2022-ம் ஆண்டு நவீன் கவுடா என்பவர் தனது ஆபாச வீடியோவை மார்ஃபிங் செய்து வெளியிடப்போவதாக மிரட்டுவதாக பிரஜ்வல் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் தடை வாங்கினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஹாசன் பாஜக பிரமுகர் தேவராஜ் கவுடா, ‘‘பிரஜ்வல் தொடர்புடைய 2,976 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் எனக்கு கிடைத்துள்ளது. அதில் பல அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, அவருக்கு பாஜக கூட்டணியில் சீட் கொடுக்ககூடாது' என கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருக்கு கடிதம் எழுதினார். இப்போது அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

கர்நாடகாவில் மே 7-ம் தேதி அடுத்தகட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரஜ்வலின் ஆபாச வீடியோ விவகாரம், பாஜக கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x