Published : 29 Apr 2024 08:48 PM
Last Updated : 29 Apr 2024 08:48 PM
புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி பள்ளிகளில் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க தவறிய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, மாணவர்களுக்கு புத்தகங்கள் உள்ளிட்டவை விரைவில் கிடைப்பதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
டெல்லி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டிருப்பது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
டெல்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதால் இந்த விவகாரத்தில் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார். இது குறித்து இன்று விசாரித்த நீதிபதிகள், “அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகும், அவர் முதல்வராக தொடர்வது அவரின் தனிப்பட்ட முடிவு.
ஆனால், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், சீருடைகள் சரியான நேரத்தில் கிடைப்பது அவர்களின் அடிப்படை உரிமை ஆகும். அவர்களின் அந்த உரிமைகளை நசுக்க முடியாது. எந்தவொரு மாநிலத்திலும் முதல்வரின் பதவி என்பது அலங்கார பதவி கிடையாது. குறிப்பாக நாட்டின் தலைநகரான டெல்லிக்கு இன்னும் முக்கியத்துவம் இருக்கிறது.
இந்தப் பதவியில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருக்க வேண்டும். வெள்ளம், போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும்போது, அதை கையாளுவதில் அவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது” என்றார்.
டெல்லி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் விரைவில் கிடைப்பதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT