Published : 29 Apr 2024 02:59 PM
Last Updated : 29 Apr 2024 02:59 PM
புதுடெல்லி: “இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக இருப்பார்கள்” என மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.
இண்டியா கூட்டணிக்கு யார் பிரதமர் வேட்பாளர் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில், அமித் ஷா இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். அதன் பின்னர் வாய்ப்பிருந்தால் ராகுல் பிரதமராவார்.
இண்டியா கூட்டணி சொல்வதைப் போல ஒரு நாட்டை இப்படியெல்லாம் நடத்த முடியாது. 30 ஆண்டுகளாக நிலையற்ற ஆட்சி நடைபெற்றதால், நாடு அதற்கான விலையை கொடுத்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் வலிமையான தலைமை கிடைத்திருப்பதன் மூலம் கொள்கை, வளர்ச்சி திட்டம் ஆகியவற்றிலும் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம்” என்றும் அமித் ஷா கூறினார்.
பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு, “ஒருவேளை காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்களை பதவிக்கு கொண்டுவர முயலும். எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர்” என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT