Published : 29 Apr 2024 05:10 AM
Last Updated : 29 Apr 2024 05:10 AM

ஜார்க்கண்ட்டில் பறவைக் காய்ச்சல் பரவுகிறது: 2 மருத்துவர்கள் உட்பட 8 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்த 2 கால்நடை மருத்துவர்கள் உட்பட 8 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக் கப்படுகிறது.

கடந்த 1996-ம் ஆண்டு சீனாவின் குவாங்டாங் பகுதியில் பறவைக் காய்ச்சல் (எச்5என்1 வைரஸ்) முதல்முறையாக கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க உலகம் முழுவதும் இதுவரை 50 கோடி கோழி, பறவை, வாத்துகள் அழிக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக எச்5என்1 வைரஸ் பறவைகளிடம் மட்டுமே பரவி வந்தன. கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் மரபணு மாறிய எச்5என்1 வைரஸ் பசுக்களுக்கு பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவின் டெக்சாஸ் உள்ளிட்ட 8 மாகாணங்களை சேர்ந்த பசுக்கள் உட்பட ஏராளமான கால்நடைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த மாகாணங்களை சேர்ந்த பசுக்களின் பால் மாதிரிகள் பல்வேறு ஆய்வகங்களில் சோதனை செய்யப்படுகிறது. இதில் ஐந்தில் ஒரு பால் மாதிரியில் எச்5என்1 வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் கொலராடோ, டெக்சாஸ் மாகாண பால் பண்ணைகளில் பணியாற்றிய இரு ஊழியர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு இருவரும் குணமடைந்தனர்.

கரோனா வைரஸை போன்றுஎச்5என்1 வைரஸும் பெருந்தொற்றாக மாறும் வாய்ப்பிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதன்காரணமாக உலகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் பறவைக் காய்ச்சல்: கேரளாவில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வருவது அண்மையில் கண்டறியப்பட்டது. இதன்பிறகு ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் தென்பட்டன.

தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. அந்த மாநில தலைநகர்ராஞ்சி அருகேயுள்ள கோழிப்பண்ணையில் எச்5என்1 வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டு, அங்குள்ள கோழிகள் அழிக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்த 2 கால்நடை மருத்துவர்கள் மற்றும் கோழி பண்ணையில் பணியாற்றிய 6 ஊழியர்கள் ராஞ்சியில் உள்ள சதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து ஜார்க்கண்ட் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ராஞ்சி சதார் அரசு மருத்துவமனையில் பறவைக் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 2 கால்நடை மருத்துவர்கள், 6 ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

ஒடிசாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணையை சுற்றி சுமார் ஒருகி.மீ. தொலைவில் உள்ள அனைத்துபண்ணைகளின் கோழி, வாத்துகளை அழிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் கோழி

இறைச்சி, கோழி முட்டைகளைவிற்கவும் தடை விதிக்கப்பட்டி ருக்கிறது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள எச்5என்1 வகை வைரஸ் மனிதர்களுக்கும் பரவும் ஆபத்து இருப்பதால் முன்னெச்சரிக்கையாக ராஞ்சி சதார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கிறோம். நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பறவைக் காய்ச்சல் தொடர்பான விரிவான அறிக்கையை மத்தியசுகாதாரத் துறையிடம் சமர்ப்பிப்போம்.

பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது தொடர்பாக நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு உள்ளோம். மாவட்ட ஆட்சியர், ராஞ்சி மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், கால்நடை துறை மூத்த அதிகாரி அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு ஜார்க்கண்ட் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x