Published : 28 Apr 2024 04:10 PM
Last Updated : 28 Apr 2024 04:10 PM

அர்வீந்தர் லவ்லி ராஜினாமா | ஆம் ஆத்மியின் பழைய வாக்குறுதியை சுட்டிக்காட்டி பாஜக எதிர்வினை 

அர்வீந்தர் சிங் லவ்லி

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததை கண்டித்து மக்களவைத் தேர்தல் நேரத்தில் டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்வீந்தர் சிங் லவ்லி அதிரடியாக ராஜினாமா செய்திருப்பது குறித்து பாஜக எதிர்வினையாற்றியுள்ளது. தேசிய தலைநகரில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான கட்சியின் இருப்பை ஆம் ஆத்மி கட்சி முற்றிலுமாக அழித்துவிட்டது என்றும் பாஜக விமர்சித்துள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளின் கூட்டணிகளின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் டெல்லியின் மறைந்த முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை கைது செய்வோம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்ததை நினைவுபடுத்தியுள்ளார். அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சிக்கு என்று கொள்கைகளோ தொலைநோக்கு பார்வையோ இல்லை. அதனிடம் குழப்பங்களும், பிளவுகளும், முரண்களும் மட்டுமே உள்ளன.

இது எவ்வாறு செயல்படுகிறது என்று நாம் பார்க்கிறோம். குறிப்பாக டெல்லியில். ஆயுதப்படை வீரர்களை துஷ்பிரயோகம் செய்து, நக்சல்களை தியாகிகள் என்று சொன்ன, டெல்லிக்கு எதுவுமே செய்யாத கண்ணையா குமார் போன்றவர்களுக்கு டெல்லியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் வீதிகளில் இறங்கிப் போராடியதை நாம் பார்தோம்.

ஷீலா தீட்சித் மற்றும் சோனியா காந்தியை சிறையில் அடைப்போம் என்று கூறி டெல்லியில் காங்கிரஸின் இருப்பை ஆம் ஆத்மி கட்சி முற்றிலுமாக அழித்துவிட்டது. டெல்லி மதுபான ஊழலில் ஆம் ஆத்மி கட்சி எவ்வாறு ஈடுபட்டது என்று காங்கிரஸ் கட்சி கூறியதை நாம் பார்த்தோம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன, அதற்காக வாக்களார்கள் ஒன்றிணைவார்கள் என்று பொருள் இல்லை. காங்கிரஸ் கட்சியால் அதன் சொந்தத் தலைவர்களையே தக்கவைத்துக் கொள்ள முடியாததை நாம் பார்க்கிறோம். ஏனென்றால் காங்கிரஸ் கட்சியின் பாசாங்குத்தனத்தை காட்டும் கண்ணாடிகளாக அவர்கள் மாறி விட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்ததை எதிர்த்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்வீந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அர்வீந்தர் சிங் லவ்லி தனது ராஜினாமா கடிதத்தில், “டெல்லி காங்கிரஸ் கட்சியானது ஆம் ஆத்மி கட்சியுடன் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி வைத்ததில் விருப்பமில்லை. காங்கிரஸ் கட்சி மீது போலியான, ஜோடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஆம் ஆத்மி. அப்படியிருந்தும் கூட அத்தகைய கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முடிவு செய்தது. ஆனால் டெல்லி காங்கிரஸில் நான் உள்பட சில மூத்த தலைவர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தோம். எங்கள் அனைவரின் கோரிக்கைகளையும் மேலிடம் ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டது.

நான் கட்சியின் முடிவை மதித்தேன். அதனாலேயே பொதுவெளியில் அதை நான் ஆதரித்தேன். வடகிழக்கு டெல்லி வேட்பாளர் கண்ணய்யா குமார் தனது பிரச்சார மேடையில் டெல்லி முதல்வரையும், ஆம் ஆத்மி கட்சியின் கல்வி, சுகாதார மேம்பாடு, சாலை, மின் துறை செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினார். அது உண்மையல்ல. தேசிய கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கப் பேசப்பட்டவை. அது டெல்லி காங்கிரஸின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் சரியாக சென்று சேரவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு அரவிந்த் கேஜ்ரிவாலும் அவரது கூட்டாளிகளும் ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்போதைய மத்திய அரசுக்கு ஏதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடந்ததற்கு பின்னர் ஆம் ஆத்மி கட்சி உதயமானது. 2013-ல் பாஜகவுடன் 49 நாட்கள் கூட்டணி அமைத்து டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியை ஆம் ஆத்மி கட்சி வெளியேற்றியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x