Published : 28 Apr 2024 05:30 AM
Last Updated : 28 Apr 2024 05:30 AM
புதுடெல்லி: அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகும் டெல்லி முதல்வராக நீடிப்பதற்கு பதவி மோகமும் மக்கள் பணத்தில் கட்டப்பட்ட பங்களா மீதான மோகமுமே காரணம் என்று பாஜக விமர்சனம் செய்துள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லி அரசுப் பள்ளிகளில் புதிய கல்வி ஆண்டுக்கான பாட நூல்கள் இதுவரை வழங்கப்படாதது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரத்தில் சிறையில் இருக்கும் முதல்வர் கேஜ்ரிவாலிடம் ஒப்புதல் பெறுவது அவசியம் என்று ஆம்ஆத்மி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிமன்றம், “அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகும் முதல்வர் பதவியில் நீடிப்பது, தேச நலனை விட கட்சியின் அரசியல் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதை எடுத்துக் காட்டுகிறது” என்று கருத்து தெரிவித்தது.
இதுதொடர்பாக டெல்லி பாஜகதலைவர் வீரேந்திர சச்தேவா நேற்றுசெய்தியாளரகளிடம் கூறியதாவது: அர்விந்த் கேஜ்ரிவாலும் அவரதுஅரசும் நீதிமன்றத்தால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்யாராக இருந்தாலும் ஒரு வழக்கில்கைது செய்யப்பட்டால், 48 மணி நேரத்திற்குள் அவரது ராஜினாமா பெறப்படும். ஆனால் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக இருந்து இன்னும் அரசை நடத்துவது வெட்கக்கேடானது. முதல்வர் பதவியை அவர் தார்மீக அடிப்டையில் உடனடியாக பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் பதவி மோகமும் மக்கள் செலுத்திய வரிப் பணத்தில் கட்டிய பங்களா மீதான மோகமும் அவரை பதவியை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை.
இவ்வாறு வீரேந்திர சச்தேவா கூறினார்.பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறும்போது, “முதல்வர் பதவியை கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய மறுப்பதன் மூலம், டெல்லியில் அரசியலமைப்பு சட்டப் பிரச்சினைகள் உருவாக காரணமாகியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT