Published : 27 Apr 2024 02:38 PM
Last Updated : 27 Apr 2024 02:38 PM

“பிரதமர் மோடியால் புதிய உயரத்தை எட்டியது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை” - ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் | படம்: எல்.பாலசந்தர்

புதுடெல்லி: பிரதமர் மோடியால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய உயரத்தை எட்டியுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயாரித்தக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மோடி அரசு போய்விட்டது. சில நாட்களாக இது பாஜக சர்க்காராக இருந்தது. நேற்று முதல் அது என்டிஏ சர்க்காராக இருக்கிறது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் நடந்து வரும் மாற்றங்களை நீங்கள் கவனித்தீர்களா?

ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 19 வரை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மோடி நிராகரித்து வந்தார். ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின்னர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புதிய உயரத்தை எட்டியுள்ளது. நன்றி பிரதமரே!" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஏப்ரல் 24-ம் தேதி சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் ஆதரித்த கருத்துகளை மோடியால் சுட்டிக்காட்ட முடியுமா? அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள் மற்றும் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி வழங்கும் திட்டங்கள் காங்கிரஸ் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பாஜக தேர்தல் அறிக்கை 2 மணி நேரத்தில் சுவடு தெரியாமல் காணாமல் போனது. அதில் எதுவும் இல்லை என்பதால் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை.

மோடியின் கேரண்டி அரசியல் கட்சியின் அறிக்கையாக இருக்க முடியாது. எனவே அவர் (பிரதமர் மோடி) காங்கிரஸ் அறிக்கையை பார்த்து பொறாமை கொள்கிறார். எனவே அவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை களங்கப்படுத்துகிறார். முதலில் பிரதமர் மோடி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை முழுமையாகப் படிக்குமாறு வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி ஏப்ரல் 5-ம் தேதி டெல்லியில் வெளியிட்டது. 48 பக்கங்கள் கொண்ட இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான நீதி, சமூக நீதி ஆகிய 5 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை ‘நியாய பத்திரம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியான மறுநாள் (ஏப்.6) உத்தரப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்றைய காங்கிரஸ், இந்தியாவின் நம்பிக்கைகளிலும், விருப்பங்களிலும் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை நேற்று (ஏப்.5) அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை நிரூபித்துள்ளது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் முஸ்லிம் லீக்குக்கு இருந்த அதே சிந்தனையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கிறது" என்று சாடியிருந்தார்.

தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதே அதற்கு சாட்சி" என்று குற்றம்சாட்டியிருந்து குறிப்பிடத்தக்கது.

இந்திய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி தொடங்கி அமைதியாக நடந்து வருகிறது. இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் நடக்க இருக்கிறது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x