Published : 27 Apr 2024 04:13 AM
Last Updated : 27 Apr 2024 04:13 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 2-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 77.93 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிரா, பிஹார், உத்தர பிரதேச மாநிலங்களில் 53 சதவீத வாக்குகள் பதிவாகின.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த 19-ம்தேதி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 88 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் பெண்கள் 102 பேர், மூன்றாம் பாலினத்தவர் இருவர் உட்பட மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கேரளாவின் 20 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா 8, மத்திய பிரதேசம் 6, அசாம் மற்றும் பிஹார் தலா 5, மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் தலா 3,ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், திரிபுராமாநிலங்களில் தலா 1 தொகுதிகள் என 88 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஒட்டுமொத்தமாக 61 சதவீதவாக்குகள் பதிவாகின. மிக அதிகபட்சமாக திரிபுராவில் 77.93 சதவீதவாக்குகள் பதிவாகின. மகாராஷ்டிரா, பிஹார், உத்தர பிரதேசத்தில் 53 சதவீத வாக்குகள் பதிவாகின.
மேற்கு வங்கத்தில் பதற்றம்: மேற்குவங்கத்தின் பாலூர்காட் தொகுதியில் பாஜக மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார் போட்டியிடுகிறார். அவர் நேற்று பாலூர்காட் வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்றார்.
அப்போது அவருக்கும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இதேபோல, மேற்குவங்கத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸார் - பாஜகவினர் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
கிழக்கு மிதினாபூரில் பாஜக தொண்டர் தனஞ்செய் (18) என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு திரிணமூல் நிர்வாகிகளே காரணம் என்று பாஜகவினர் குற்றம்சாட்டினர்.
இதுபோன்ற சம்பவங்களால் மேற்குவங்கத்தில் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நீடித்தது.
பாதுகாப்பு படை வீரர் தற்கொலை: மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட மத்திய பாதுகாப்பு படை வீரர் ஜியாலால், சத்தீஸ்கரின் காரியாபாண்ட் பகுதியில் நேற்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணிப்பூர் மாநிலத்தின் உக்ரல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் நுழைந்து வாக்குச்சாவடியின் கதவுகளை மூடினர். வாக்காளர்களை அனுமதிக்காமல் அவர்களே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகளை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
முக்கிய வேட்பாளர்கள்: கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, உத்தர பிரதேசத்தின் மதுராவில் பாஜக மூத்த தலைவர் நடிகை ஹேமமாலினி, கர்நாடகா மாநிலம் மண்டியா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி ஆகியோர் நேற்றைய தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT