Published : 18 Apr 2018 03:04 PM
Last Updated : 18 Apr 2018 03:04 PM
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் சிங்கப்பூர், கலிபோர்னியா நகருக்கு இணையாகப் பார்க்கப்படும், பேசப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதிக்கும், தன்னுடைய அமேதி தொகுதிக்கும் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். அமேதி தொகுதிக்கு நேற்று சென்று மக்களிடம் ராகுல்காந்தி குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது காங்கிரஸ் ஆதரவாளர்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது:
அமேதி தொகுதியும், ரேபரேலி தொகுதியும், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் சிங்கப்பூர், கலிபோர்னியா நகரங்களுக்கு இணையாகப் பேசப்படும். எத்தனை நாட்களுக்கு இந்தத் தொகுதிகளின் வளர்ச்சியை ஆளும் கட்சியினர் முடக்கி வைத்திருக்க முடியும். இங்கு விரைவில் உணவுப்பூங்காக்கள், ஐஐடி கல்வி நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உருவாக்கப்படும். வரும் காலத்தில் அமேதி நகரம், கல்விக்கு மிகச்சிறந்த இடமாகத் திகழும். இது கண்டிப்பாக நிகழும், இதை யாரும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
முன்னதாக, ரேபரேலி தொகுதிக்கு சென்று இருந்த ராகுல் காந்தி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த காங்கிரஸ் ஆதரவாளர்களிடம் ராகுல் காந்தி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்று குற்றம்சாட்டினார். அது குறித்து அவர் குறிப்பிடுகையில், பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்து, மக்களை நடுத்தெருவில் பணத்துக்காக நிறுத்திவிட்டார். மக்களிடம் இருந்து 500 ரூபாயைப் பறித்து அதை நிரவ்மோடியின் பாக்கெட்டில் வைத்துவிட்டார். நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசாததது குறித்து எந்தவிதமான வார்த்தைகளும் சொல்லவில்லை.
நல்ல காலம் வந்துவிட்டது என்று பிரதமர் மோடி தேர்தலின் போது வாக்குறுதியளித்தார். ஆனால், நல்லகாலம் என்பது நிரவ் மோடி போன்று இருக்கும் 15-க்கும் மேற்பட்ட சிலருக்குத்தான் வந்துள்ளது. அப்பாவி மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும், ஏழைகளுக்கும் வரவில்லை. அவர்கள் இன்னும் துன்பத்தையே அனுபவித்து வருகிறார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT