Published : 15 Apr 2018 10:12 AM
Last Updated : 15 Apr 2018 10:12 AM
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும் இலவச சிற்றுண்டியுடன், சட்னியும் சேர்த்து வழங்கும் திட்டத்தை நேற்று முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் செல்கின்றனர். இவர்கள் சுவாமியை தரிசிக்க வைகுண்டம்-1 மற்றும் 2வது க்யூ காம்ப்ளக்ஸில் சிறிது நேரம் தங்க வைக்கப்படுகின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், அன்னதான அறக்கட்டளை சார்பில் காம்ப்ளக்ஸில் உள்ளவர்களுக்கு இலவசமாக தயிர் சாதம், சாம்பார் சாதம் மற்றும் பொங்கல், உப்புமா மற்றும் பால் போன்றவை வழங்கப்படுகிறது.
ஆனால், சிற்றுண்டிகளான பொங்கல், உப்புமா போன்றவைகளுக்கு சட்னி வழங்கப்படுவதில்லை. இதனால் சில பக்தர்கள் அந்த சிற்றுண்டிகளை முழுமையாக சாப்பிட முடியாமல் வீணாக்குகின்றனர். இது தொடர்பாக கடந்த ‘டயல் யுவர் இஓ’ எனப்படும் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியில் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து பக்தர்கள் குறை கூறினர். பொங்கல், உப்புமா போன்றவைகளுக்கு சட்னியும் வழங்கினால் நன்றாக இருக்கும் என தங்களது கருத்துக்களை கூறினர். இதனை பரிசீலித்த தேவஸ்தானம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்றது. நேற்று தமிழ் புத்தாண்டு முதல் இலவசமாக வழங்கப்படும் சிற்றுண்டிகளுக்கு சட்னியும் சேர்த்து விநியோகம் செய்யப்பட்டது. இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
10 மணி நேரம் காத்திருப்பு
தமிழ் புத்தாண்டு மற்றும் ஞாயிற்றுக்கிழமை என நேற்றும் இன்றும் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதனால் தர்ம தரிசனத்தில் பக்தர்கள் சுமார் 10 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர். நடைபாதை வழியாக மலையேறி திருமலைக்கு வந்த பக்தர்கள் திவ்ய தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்க 5 மணி நேரம் வரை காத்திருந்தனர். ரூ.300 சிறப்புக் கட்டணம் செலுத்திய பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT