Last Updated : 16 Apr, 2018 08:46 PM

 

Published : 16 Apr 2018 08:46 PM
Last Updated : 16 Apr 2018 08:46 PM

ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு வழக்கு: தீர்ப்பு வழங்கிய சில மணிநேரங்களில் நீதிபதி திடீர் ராஜினாமா

 

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தீர்ப்பு வழங்கிய சில மணிநேரங்களில் தனது பதவியை ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் மே 18-ம்தேதி குண்டுவெடித்தது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ அமைப்பிடமிருந்து, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தத் தொடங்கியது. இதில் 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் பெரும்பாலானோர் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

அவர்களில் தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, சுவாமி அஸீமானாந்தா, பரத் மோகன் லால் ,ரதேஷ்வர், ராஜேந்திர சவுத்ரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். சுனில் ஜோஷி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 231 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன, 400-க்கும் மேற்பட்ட ஆவணங்கள், ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை முடிந்த நிலையில் இன்று நீதிபதி ரவீந்திர ரெட்டி தீர்ப்பளித்தார்.

அதில் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை, குற்றத்தை நிரூபிக்க தேசிய புலனாய்வு அமைப்பு தவறிவிட்டது என்று கூறி நீதிபதி அனைவரையும் விடுவித்துத் தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், தீர்ப்பு அளித்த சில மணிநேரங்களில் நீதிபதி ரவீந்திர ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து அறிவித்தார். இதுதொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை மாவட்ட நீதிபதிக்கும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பிவைத்தார்.

என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காகவே நான் எனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறேன். நான் வழங்கிய தீர்ப்புக்கும், இந்த ராஜினாமாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நீதிபதி ரவீந்திர ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.

நீதிபதியின் ராஜினாமா செய்ததற்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி சில மணிநேரங்களில் தனது பதவியை ராஜினாமா செய்து இருப்பது புதிராக இருக்கிறது. அவரின் முடிவைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x