Published : 27 Apr 2024 12:57 AM
Last Updated : 27 Apr 2024 12:57 AM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மிக நன்றாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மிக நன்றாக இருந்தது. இன்று வாக்களித்த இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்றி. என்.டி.ஏ.வுக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளை மேலும் ஏமாற்றப் போகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள். இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் என்.டி.ஏ.வுவுக்கான ஆதரவை வலுப்படுத்துகின்றனர்." என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று நிறைவடைந்தது. இரவு 10 மணி நிலவரப்படி 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக திரிபுராவில் 78.53 சதவீதம், மணிப்பூரில் 77.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதை தவிர, கேரளாவில் 65.78 சதவீதம், கர்நாடகா 68.26 சதவீதம், அசாம் 71.11 சதவீதம், பிஹார் 55.08 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேநேரம் குறைந்த பட்சமாக உத்தரபிரதேசத்தில் 54.85 சதவீதம், மகாராஷ்டிரா 56.63 சதவீதம், மத்திய பிரதேசம் 57.76 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 73.55 சதவீதம், ஜம்மு காஷ்மீர் 71.91 சதவீதம், ராஜஸ்தான் 64.07 சதவீதம், மேற்கு வங்கம் 71.84 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மணிப்பூரில் வன்முறை: மணிப்பூரில் உள்ள உக்ரூல் மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது இரண்டு வாக்குச் சாவடிகளில் வன்முறைகள் நிகழ்ந்தன. வாக்குச் சாவடிகளில் புகுந்த வன்முறையாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள், மேசை மற்றும் நாற்காலிகளை சூறையாடினர்.
இதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் தொகுதியில் உள்ள தெக்கனே மென்டரே, துளசிகரே, படசலனத்தை கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனப் புகார் கூறி அங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க முன்வந்தவர்களுடன் மற்றொரு தரப்பு மோதலில் ஈடுபட்டபோது வாக்குச்சாவடி சூறையாடப்பட்டது. வாக்குச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டு மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT