Published : 27 Apr 2024 12:23 AM
Last Updated : 27 Apr 2024 12:23 AM

சென்னையில் நடந்த இதய அறுவை சிகிச்சை: தமிழகத்தில் மறுவாழ்வு பெற்ற பாகிஸ்தான் பெண்

சென்னை: இதய நோயால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியர் ஒருவரின் இதய தானம் மூலம் புதிய வாழ்க்கையை பெற்றுள்ளார்.

அவரின் பெயர் ஆயிஷா ராஷன். அவருக்கு வயது 19. ஆயிஷா கடந்த பத்தாண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். 2014ம் ஆண்டே இதற்காக இந்தியா வந்த அவர், இதய செயலிழப்பை தவிர்க்க சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு கருவி மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சீக்கிரமாகவே அந்த கருவி செயலிழக்க ஆயிஷா உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.

பாகிஸ்தானில் அதற்கான வசதி இல்லாத நிலையில், மீண்டும் இந்தியாவில் சிகிச்சை பெற முடிவெடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினர். ஆயிஷாவின் இதயத்தில் கசிவு இருந்ததால் அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை அவசியம் என்பதை அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.35 லட்சம் தேவைப்பட்டது. எளிய பின்னணியை கொண்ட ஆயிஷாவின் குடும்பத்தால் அவ்வளவு பெரிய தொகையை தயார் செய்ய முடியவில்லை. பின்னர் தனியார் மருத்துவமனை ஏற்பாட்டில், அறக்கட்டளை மூலம் தேவையான பணத்தை தயார் செய்தனர். மொத்தம் 18 மாதங்கள் ஆயிஷா சென்னையில் இதற்காக தங்கிய நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு, ஆயிஷா ராஷனுக்கு டெல்லியில் இருந்து இதய தானம் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இலவசமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வெற்றிகரமாக சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது நல்ல உடல்நலத்துடன் உள்ள ஆயிஷா இந்திய அரசுக்கும் மருத்துவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இனி தனது பேஷன் டிசைன் கனவுகளை நோக்கி நகர்வேன் என்றும் ஆயிஷா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x