Published : 26 Apr 2024 10:28 AM
Last Updated : 26 Apr 2024 10:28 AM
மும்பை: “சொத்துகள் மறுபங்கீடு தொடர்பான விவாதங்கள் எல்லாம் ஒட்டுமொத்த முட்டாள்தனம். மாறாக சாதிவாரி கணக்கெடுப்பே தேவை. அதைப்பற்றியே இப்போது விவாதிக்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை நாம் பாதுகாக்க வேண்டுமென்றால், இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஜூன் 4 ஆம் தேதிக்குப் பின்னரும் வேற்றுமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகத்துக்கு சரத்பவார் அளித்தப் பேட்டியிலிருந்து: இந்தத் தேர்தலின் மிகப்பெரிய பிரச்சினை என்ன?. முந்தைய 2 தேர்தல்களைவிட இது ஏன் வித்தியாசமானது?
இந்தத் தேர்தலில் வளர்ச்சியைப் பற்றிய பேச்சு இல்லை. அதுவே பெரிய பிரச்சினை. தேசத்தின் பிரதமர் ஒரு அமைப்பின் அடையாளம். அவரை நாம் மதிக்க வேண்டும். ஆனால் தேர்தலில் தனக்கு போதிய ஆதரவு இல்லாததைப் பார்க்கும் அவர் வளர்ச்சிக்கான விவாதங்களில் இருந்து வழிமாறிச் செல்கிறார். ஒரு தேசத்தின் பிரதமர் பெண்களின் மாங்கல்யம், இந்து - முஸ்லிம் என்றெல்லாம் எப்படிப் பேசுகிறார் என்று எனக்குப் புரியவில்லை.
சொத்து மறுபங்கீடு குறித்து உங்களது கருத்து என்ன?
இது ஒரு பிரச்சினை என்றே நான் கருதவில்லை. உண்மையில் இது விவாதத்துக்கான பொருளே இல்லை. இது முட்டாள்தனமானது என்பது எல்லோருக்குமே தெரியும். பொதுமக்கள் பேச விரும்பும் பிரச்சினை இதுவல்ல. அவர்களுக்கு விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை தான் பிரச்சினை. ஆனால் அந்தத் திருவாளர் அதையெல்லாம் தவிர்த்துவிட்டு சொத்துகள் மறுபங்கீடு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்.
கட்சியில் மீண்டும் அஜித் பவாரை இணைப்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா?
அவர் நரேந்திர மோடியின் பாஜகவில் கூட்டணியாக இருக்கும்வரை அதைப்பற்றி சிந்திப்பதற்கில்லை.
இண்டியா கூட்டணியில் நீங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள். ஆனால் அங்கு அவ்வப்போது தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக நிதிஷ் குமார் விலகல்.. நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நிதிஷ் குமார் ஒரு சந்தர்ப்பவாதி என்பதை கவலையோடு கூறிக்கொள்கிறேன். இண்டியா கூட்டணியின் மற்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் வேண்டுமானால் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றாமல் இருக்கலாம். உதாரணத்துக்கு மம்தாவின் தனித்துப் போட்டி போல். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் அனைவரும் இணைந்தே இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே சிந்தனை. பெரும்பான்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் ஒன்றாக இயங்க வேண்டும். அப்படி ஒற்றுமையாக செயல்படாவிட்டால் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும். இவ்வாறு சரத் பவார் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
இன்று நாடு முழுவதும் 2-ம் கட்டமாக கேரளா - 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் - 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் - தலா 8, மத்திய பிரதேசம் - 6,பிஹார், அசாம் - தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் - தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT