Published : 26 Apr 2024 08:58 AM
Last Updated : 26 Apr 2024 08:58 AM
புதுடெல்லி: மக்களவை 2 ஆம் கட்ட தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளில் இன்று (ஏப்.26) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிக்க பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் காலை தொடங்கி பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.
பிரதமரின் வேண்டுகோள்: முன்னதாக, இன்று அதிகாலை பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இன்று தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுகிறேன். வாக்குப்பதிவு அதிகமானால் அது நம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். இளம் வாக்காளர்கள், பெண்கள் பெருமளவில் முன்வந்து வாக்களிக்க வேண்டுகிறேன். உங்கள் வாக்கு; உங்கள் குரல்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “எனது அன்பான நாட்டுமக்களே! இன்று வரலாற்றுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு. உங்கள் வாக்கு அடுத்த அரசாங்கம் ஒரு சில பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமானதா அல்லது 140 கோடி இந்தியர்களுக்கானதா என்று முடிவு செய்யும். அதனால் இன்று வீடுகளைவிட்டு வெளியே வாருங்கள். வாக்களியுங்கள். அரசமைப்பின் காவலராகுங்கள். வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் என்று கோரியுள்ளார்.
வாக்களித்த பிரபலங்கள்: 2-ம் கட்டமாக கேரளா - 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் - 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் - தலா 8, மத்திய பிரதேசம் - 6,பிஹார், அசாம் - தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் - தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தனது வீட்டிலிருந்து நடந்தே வந்து வாக்களித்துச் சென்றார். கேரள எதிர்க்கட்சித் தலைவர் விடி சுதீஷன் எர்ணாகுளத்தில் வாக்களித்தார்.
வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், “கேரள மக்களுக்கு பாஜகவும், காங்கிரஸும் எதுவும் செய்ததில்லை. செய்யவும் செய்யாது. இப்போதுகூட மத்தியில் ஆளும் பாஜக அரசு கேரளாவுக்கு உரிய நிதி வழங்க மறுக்கிறது” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் ஆலப்புழா தொகுதி வேட்பாளர் கேசி வேணுகோபால் வாக்களித்துவிட்டு அளித்த பேட்டியில், “ஆலப்புழா மக்கள் என்னுடன் நிற்பார்கள் என நான் நம்புகிறேன். முதற்கட்டத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடி பதற்றத்தில் உள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் பெருமளவில் கொண்டு சேர்த்தமைக்காக பிரதமர் மோடிக்கு நான் நன்றி சொல்கிறேன். கேரளாவில் யுடிஎஃப் 20 தொகுதிகளைக் கைப்பற்றும். வயநாட்டு மக்களும் கேரள மக்களும் நாங்கள் ராகுலின் மக்கள் என்பதை நிரூபிப்பார்கள்” என்றார்.
திரிச்சூரில் வாக்களித்த பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி, “இந்தத் தேர்தல் மக்களின் இதயங்களைப் பிரதிபலிக்கும். தேச வளச்சியில் கேரள மக்களின் பங்களிப்பு தெரியவரும். மக்கள் இதயங்கள் திரிச்சூரில் மட்டுமல்ல கேரளாவின் அனைத்துத் தொகுதிகளிலும் மலரும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கை பதிவு செய்தார். இன்போசிஸ் நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தி அவரது மனைவியும் ராஜ்யசபா எம்.பி.யுமான சுதா மூர்த்தியும் பெங்களூருவில் வாக்களித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT