Published : 25 Apr 2018 08:37 AM
Last Updated : 25 Apr 2018 08:37 AM

மின்சார செலவை 50 சதவீதம் வரை குறைக்க மாநிலம் முழுவதும் எல்இடி பல்புகள்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

மின்சார செலவைக் குறைக்க, அடுத்த ஆண்டுக்குள் ஆந்திர மாநிலம் முழுவதும் எல்இடி பல்புகள் அமைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச் சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் துவாரபூடி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

நாட்டிலேயே 100 சதவீதம் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்ட மாவட்டமாக கிழக்கு கோதாவரி மாவட்டம் உருவாகி இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, மண்டலங்கள், கிராம பஞ்சாயத்துகள் என அனைத்து அரசு அலுவலகங்களிலும், சாலைகளிலும் என மொத்தம் 3 லட்சம் எல்இடி பல்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் முழுவதும் வரும் அக்டோபர் 2-ம் தேதிக்குள்ளாக 100 சதவீதம் எல்இடி பல்புகள் பொருத்தப்படும். இதற்காக ‘சந்திர கிராந்தி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படுகிறது. எல்இடி பல்புகள் பொருத்துவன் மூலம் மின்சார செலவு 40 முதல் 50 சதவீதம் வரை குறையும்.

இதுதவிர, ரூ.4,500 கோடி செலவில் ஆந்திராவில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார். இந்நிகழ்ச்சியில் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் லோகேஷ் மற்றும் எம்.பி. எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x