Published : 26 Apr 2024 04:30 AM
Last Updated : 26 Apr 2024 04:30 AM

2-ம் கட்ட மக்களவை தேர்தல்: கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

கோப்புப்படம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 2-ம் கட்டமாக கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

இதைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக கேரளா - 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் - 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் - தலா 8, மத்திய பிரதேசம் - 6,பிஹார், அசாம் - தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் - தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்க இருந்தது. பகுஜன் சமாஜ் வேட்பாளர் அசோக் பலாவி, சமீபத்தில் மாரடைப்பால் காலமானதால், அங்கு வாக்குப்பதிவுமே 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

2-ம் கட்ட தேர்தலில் 1,098 ஆண்கள், 102 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 1,202 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வயநாடு தொகுதியில் ராகுல்: கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேஇங்கு நேரடி போட்டி நிலவுகிறது. பாஜகவும் களத்தில் உள்ளது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆனி ராஜா, பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் போட்டியிடுகின்றனர்.

திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ்சந்திரசேகர், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா, ஜோத்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங், கரண் சிங் (காங்கிரஸ்), பார்மர் தொகுதியில் மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் பாலிவுட் நடிகை ஹேமமாலினி, மீரட் தொகுதியில் ‘ராமாயணம்’ தொலைக்காட்சி தொடரில் ராமராக நடித்த அருண்கோவில் (பாஜக), கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரும் இன்றைய தேர்தல் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள்.

மணிப்பூர் மாநிலத்தின் புறநகர் மணிப்பூர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அசாம், நாகாலாந்து மாநிலங்களுடன் மணிப்பூரை இணைக்கும் முக்கிய பாலத்தை மர்ம நபர்கள் நேற்று குண்டு வைத்து தகர்த்தனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அண்டை மாநிலங்களில் இருந்து வீரர்கள் வருவதை தடுக்க இந்த சதிநடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x