Published : 25 Apr 2024 03:16 PM
Last Updated : 25 Apr 2024 03:16 PM

“என்னை தினமும் வசைபாடி மகிழ்கிறார் ராகுல் காந்தி” - பிரதமர் மோடி

மொரேனா: "என்னை தினமும் வசைபாடி மகிழ்ச்சி கொள்கிறார் ராகுல் காந்தி. அதற்காக அவர் மீது மக்கள் கோபப்பட வேண்டாம்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் மொரேனா பகுதியில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இப்போதேல்லாம் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் (ராகுல் காந்தி) என்னை தினமும் வசைபாடி மகிழ்ச்சி கொள்கிறார். என்னைத் திட்டுவதை அவர் ரசிக்கிறார். தினமும் என்னைப் பற்றி எதையாவது பேசுகிறார். நாட்டின் பிரதமரை பேசுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் அவதூறு மொழி சரியில்லை என்று வலைதளங்களில் மக்கள் வருத்தப்படுகின்றனர். காங்கிரஸின் செயலால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

இதற்காக வருத்தமோ, கோபப்படவோ வேண்டாம் என்று மக்களை நான் கேட்டுகொள்கிறேன். ஏனென்றால், அவர்கள் வாரிசுகள், நாங்கள் மக்களுக்காக உழைப்பவர்கள். பல நூற்றாண்டுகளாக உழைப்பவர்களை வாரிசுகள் அவதூறு செய்துவருகின்றனர். என்னை அவர்கள் அவதூறாக பேசட்டும். அதற்காக கோபப்பட்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

காங்கிரஸை பொறுத்தவரை தேசத்தின் வளர்ச்சியை விட காந்தி குடும்பத்தின் முன்னேற்றமே முக்கியம். காங்கிரஸின் கொள்கையே நாட்டுக்காக உழைத்தவர்களையும் தியாகம் செய்தவர்களையும் முன்னணியில் வைக்கக் கூடாது என்பதே. அவர்களுக்கு குடும்பம்தான் அனைத்தும். ஆனால், பாஜகவுக்கு நாட்டைவிட பெரிது எதுவுமில்லை.

பல ஆண்டுகளாக, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் போன்ற ராணுவ வீரர்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை. பாஜக அரசு அமைந்தவுடன் ஒரே ரேங்க், ஒரே பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தினோம்.

காங்கிரஸ் இன்னும் தங்கள் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. மதத்தை கொண்டு நாட்டை பிரித்து சீர்குலைக்கிறார்கள். தேர்தல்களில் எளிதான வெற்றி பெறுவதற்கான வழியாக அதனை பார்க்கிறார்கள். இப்போதும் அதேபோல் நாட்டின் எதிர்காலத்துடன் காங்கிரஸ் விளையாடுகிறது. மீண்டும் மதத் துவேஷத்தை பயன்படுத்த காங்கிரஸ் நினைக்கிறது.

கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கர்நாடக முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவரையும் ஓபிசி என்று அறிவித்திருக்கிறது. மேலும் பல சமுதாய மக்களையும் ஓபிசி பிரிவில் சேர்த்துள்ளது. இதன்மூலம் ஓபிசி மக்கள் பெற்றுவந்த இடஒதுக்கீட்டை பறித்து ரகசியமாக மற்றவர்களுக்கு கொடுக்கிறது" என்று பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x