Published : 25 Apr 2024 08:50 AM
Last Updated : 25 Apr 2024 08:50 AM
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் இதுவரை நடைபெற்ற 16 மக்களவைத் தேர்தல்களில் 13 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வெறும் மூன்றுமுறை மட்டுமே பிற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
இந்த 13-ல் 11 தேர்தல்களில் நேரு-காந்தி குடும்பத்தினர் எம்.பி.யாகி உள்ளனர். இங்கு 2004 முதல் போட்டியிட்டு, 3 முறை வென்றராகுல் காந்தி, 2019-ல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார், எனினும் அவர் மற்றொரு தொகுதியான கேரளாவின் வயநாட்டில் வெற்றிபெற்றார். ராகுல் இந்தமுறை மீண்டும் வயநாட்டில் போட்டியிடுகிறார். ஆனால் அமேதி குறித்து அவரது கட்சியும் மவுனம் சாதிக்கிறது.
இந்நிலையில், ராகுலின் மைத்துனரும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இச்சூழலில், அமேதியில் நேற்று அவருக்கு ஆதரவான சுவரொட்டிகள் காணப்பட்டன. ஆனால் இந்த சுவரொட்டிகள் அடுத்த சில மணி நேரத்தில் அகற்றப்பட்டு விட்டன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது,“உ.பி.யில் காங்கிரஸுக்கு மீதமுள்ள ஆதரவு அமேதி, ரேபரேலியில் மட்டுமே காணப்படுகிறது. இதை தக்கவைக்கும் வகையில் வேட்பாளர்கள் கட்சி இன்னும் அறிவிக்காதது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
இப்பிரச்சினையை விமர்சிக்கும் பாஜகவைநாங்கள் எப்படி எதிர்கொள்வது? இங்கு ராபர்ட் வதேரா உள்ளிட்டயாராக இருந்தாலும் வேட்பாளர்களாக களத்தில் இறங்காமல் தாமதிப்பது தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்தன.
இதனிடையே, அமேதியில் ராகுலின் விருந்தினர் மாளிகை புனரமைக்கப்படுகிறது. இதனால் வயநாடு வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை முடிந்த பிறகு ராகுலின் பெயர் அமேதி தொகுதிக்கு அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல் சோனியா 2004 முதல் தொடர்ந்து ஐந்து முறை வென்ற ரேபரேலியில் பிரியங்கா போட்டியிடுவார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
ரேபரேலியின் 17 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 14 முறையும் அதில், நேரு-காந்தி குடும்பத்தினர் 9 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். உ.பி.யில் இண்டியா கூட்டணி சார்பில் சமாஜ்வாதி 63, காங்கிரஸ்17 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அமேதி, ரேபரேலியில் 5-ம் கட்ட தேர்தல் நாளான மே 20-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT