Published : 25 Apr 2024 08:36 AM
Last Updated : 25 Apr 2024 08:36 AM

நாட்டுக்காக பாஜக - ஆர்எஸ்எஸ் செய்த தியாகம் என்ன? - கார்கே கேள்வி

கேரள மாநிலத்தில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சி, செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியது. இதில், அக்கட்சித் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படம்: பிடிஐ

புதுடெல்லி: ராஜஸ்தானில் சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், காங்கிரஸ்ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்தை பறித்து அவற்றை அதிக குழந்தைகளைப் பெற்ற ஊடுருவல்காரர்களுக்கு வழங்கிவிடும் என்றும் இந்துப் பெண்களின் தாலியைக் கூட காங்கிரஸ் விட்டு வைக்காது என்றும் குறிப்பிட்டார்.

அவரது இந்தப் பேச்சு தேசிய அளவில் மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களை குறிவைத்து பிரதமர் மோடி மதரீதியாக வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் என்று கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்வினையாற்றியுள்ளார். “தேர்தலுக் காக பிரதமர் மோடி மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்துப் பெண்களின் தாலிக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்று அவர் பொய் பரப்பி இருக்கிறார்.

காங்கிரஸின் 55 ஆண்டுகால ஆட்சியில் இத்தகைய சம்பவம் எப்போதேனும் நடைபெற்று இருக்கிறதா? சொல்லப்போனால், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நாட்டுக்காக அவ்வளவு தியாகங்கள் செய்திருக்கின்றனர். 1962 போரின்போது இந்திரா காந்தி தன்னுடைய நகைகளை நாட்டுக்காக தானமாக வழங்கினார்.

சுதந்திர இயக்கத்துக்காக மோதிலால் நேரு மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் தங்கள் வீட்டை தானமாக வழங்கினர். காங்கிரஸ் தலைவர்கள் தேசத்துக்காக தங்கள் உயிரை, ரத்தத்தை தியாகம் செய்துள்ளனர். பாஜக – ஆர்எஸ்எஸ் தலைவர்கள் நாட்டுக்காக என்ன தியாயகம் செய்திருக்கிறார்கள்?” என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x