Published : 24 Apr 2024 04:41 PM
Last Updated : 24 Apr 2024 04:41 PM
புதுடெல்லி: பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகரிக்கும் அழுத்தத்துக்கு இடையே தேர்தல் ஆணையம் ஆய்வைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனித்தனியே தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி அளித்த புகாரில், பிரதமரின் பேச்சு பிரிவினையை தூண்டுவதாக, தவறானதாக,. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே குறிவைப்பதாக இருப்பதாகக் கூறியிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “தேர்தல் ஆணையம் எங்களின் புகாரை ஆராய்ந்து உடனடியாக மோடிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர் சார்ந்த பாஜகவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத துவேஷங்களை ஏற்படுத்துதல், வெறுப்பை விதைத்தல் போன்ற குற்றங்களுக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மவுனம் காப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில் அதிகரிக்கும் அழுத்தங்களுக்கு இடையே தேர்தல் ஆணையம் புகார்களை ஆய்வு செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோடி என்ன பேசினார்? - முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதே அதற்கு சாட்சி.
காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்? என நினைவுகூர்வோம். “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்று மன்மோகன் சிங் கூறியிருந்தார். அப்படியென்றால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பார்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது” என்று மோடி பேசியிருந்தார். இதுவே, இந்திய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT