Published : 24 Apr 2024 05:57 PM
Last Updated : 24 Apr 2024 05:57 PM
சென்னை: “நாட்டு மக்களிடம் உள்ள சொத்து, நகை, பணம் ஆகியவற்றைக் கணக்கெடுத்து, இந்தியாவுக்குள் ஊடுருவியவர்களுக்கும், அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப் போகிறது காங்கிரஸ் கட்சி’ என்று ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் காங்கிரஸின் 2024 தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை இங்கே முழுமையாகப் பார்ப்போம்.
சம பகிர்வு: காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் ‘சம பகிர்வு’ என்ற தலைப்பின் கீழ், சமூக நீதி குறித்த அறிமுகத்துடன் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளின் விவரம்: பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக கடந்த எழுபது ஆண்டுகளாக குரல் கொடுத்து வரும் துடிப்புமிக்க முதன்மை வீரனாக காங்கிரஸ் எப்போதும் திகழ்ந்து வருகிறது. இருந்தபோதிலும் சாதிப் பாகுபாடு மாறாத ஒரு எதார்த்தமாகவே சமூகத்தில் இன்னமும் இருந்து வருகிறது. பட்டியலின, பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களால் மற்ற கட்சிகளோடு இணைந்து பயணிக்க இயலவில்லை. பிற கட்சிகள் இதில் இன்னமும் பின்தங்கியே இருக்கின்றன.
இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்டோரும், பட்டியலினத்தவரும், பழங்குடியினருமே இருக்கின்றனர். உயர் நிலையில் உள்ள பதவிகள், தொழில்கள், சேவைகளில் இவர்களின் எண்ணிக்கைக்கு முற்றிலும் பொருத்தமற்ற வகையில் மிகவும் குறைவான அளவிலேயே இவர்கள் இருந்து வருகின்றனர். முன்னேறிவரும் எந்த நவீன சமூகமும் காலகாலமாக வாய்ப்புகள் மறுக்கப்படும் இத்தகைய சமத்துவமின்மை அல்லது பாகுபாட்டினை சகித்துக் கொள்ளாது. வரலாற்று ரீதியான இத்தகைய சமத்துவமின்மையை பின்வரும் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் காங்கிரஸ் சீர்படுத்தும்.
> தேசம் தழுவிய சமூக - பொருளாதார மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பினை காங்கிரஸ் நடத்தும். சாதிகள், உள்சாதிகள், அவர்களின் சமூக - பொருளாதார நிலைமைகள் கணக்கெடுக்கப்படும். இந்த தரவுகளின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கைகள் வலுவாக எடுக்கப்படும்.
> பட்டியலினத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது என்ற வரம்பை அதிகரிப்பதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என காங்கிரஸ் உறுதியளிக்கிறது.
> கல்வி நிறுவனங்களிலும், வேலைகளிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு, அனைத்துச் சாதிகள், சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாகுபாடின்றி விரிவாக்கப்படும்
> பட்டியலினத்தோர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பாமல் விடப்பட்டிருக்கும் பழைய பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.
> அரசுத் துறைகளிலும், பொதுத் துறைகளிலும் ஒப்பந்தப் பணிமுறை அகற்றப்பட்டு, நியமனங்கள் ஒழுங்குப்படுத்தப்படும்.
> வீடு கட்டவும், தொழில் தொடங்கவும், சொத்துகள் வாங்கவும் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு நிறுவனக் கடன்கள் அதிகாிக்கப்படும்.
> அரசு நிலங்கள், நில உச்சவரம்பு சட்டத்தின்படி கிடைக்கும் கூடுதல் நிலங்கள் ஆகியவை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதைக் கண்காணிக்க ஓர் அதிகார அமைப்பை காங்கிரஸ் ஏற்படுத்தும்.
> பொதுக் கொள்முதல் கொள்கையின் வரம்பு எல்லை விரிவாக்கப்பட்டு பொதுப் பணித்துறை ஒப்பந்தங்கள் அதிகமான அளவில் பட்டியலின, பழங்குடி மக்களுக்கு வழங்கப்படும்.
> பட்டியலினத்தோர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித் தொகைக்கான நிதி, குறிப்பாக உயர் கல்விக்கான நிதி இரட்டிப்பாக்கப்படும். பட்டியலினத்தோர், பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில்வதற்கு உதவிகள் செய்யப்படும். முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு உதவித் தொகை பெறும் இத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.
> ஏழைகளுக்கு குறிப்பாக பட்டியலின, பழங்குடி மாணவர்களுக்கு உறைவிடப் பள்ளிகளின் கட்டமைப்பு ஒவ்வொரு வட்டாரத்திலும் உருவாக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்யும்.
> சமூக நீதி பற்றிய கருத்துகளைப் பரப்புவதற்காக பள்ளிப் பாடத்திட்டங்களில் சமூக சீர்த்திருத்தவாதிகளின் வாழ்க்கையும், பணிகளும் சேர்க்கப்படும்.
> படிக்கும் பழக்கத்தை உருவாக்கவும், விவாதிக்கும் இயல்பை உருவாக்கவும் நூலகங்களுடன் இணைந்த அம்பேத்கர் பவன்களை நாங்கள் உருவாக்குவோம்.
> பட்டியலினத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டப் பிரிவு 15(5) இன் படி, தனியார் கல்வி நிறுவனங்களிலும் வழங்கப்படுவதற்கான சட்டத்தை நாங்கள் நிறைவேற்றுவோம்.
> பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான துணைத் திட்டத்துக்கும் வருடாந்திர அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவதற்கு இடமளிக்கும் சட்டத்தைக் கொண்டு வருவோம்.
> கைகளினால் மலம் அள்ளும் வழக்கத்தை காங்கிரஸ் முடிவுக்குக் கொண்டு வரும். இத்தகைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் மறுதிறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, மறுவாழ்வு வழங்கப்படும். வேலைக்கு கண்ணியமான பாதுகாப்பான வாழ்க்கைக்கும் அவர்களுக்கு உறுதியளிக்கப்படும்.
கைகளால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் 2013-ம் ஆண்டின் சட்டம் கண்டிப்புடன் நிறைவேற்றப்படும். இத்தகைய பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தும் எவரும் தண்டிக்கப்படுவார்கள். பணியின்போது இறக்க நேரிடும் துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்துக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
மனிதக்கழிவுகளை நீக்குவதற்கும், கழிவுநீர்த் தடங்கள், கழிவுநீர்த் தொட்டிகளிலிருந்து கழிவுகளை நீக்கவும் கருவிகள் வாங்குவதற்குப் போதுமான நிதி ஒதுக்கப்படும். அனைத்து துப்புரவுப் பணியாளர்களுக்கும் இலவச காப்பீடு வழங்கப்படும்.
> பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989 அக்கறையுடன் அமல்படுத்தப்படும். ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் உதவி மையம் உருவாக்கப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளும், சட்டத் துணை உதவிகளும் செய்யப்படும்.
> அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தற்போது அறிவிக்கப்பட்டிருப்பவை தவிர பழங்குடி மக்கள் அதிகமாக வசிக்கும் மற்ற பகுதிகளையும் பட்டியலிடப்பட்ட பகுதிகளாக அறிவிப்பதற்கு காங்கிரஸ் அர்ப்பணிப்பு கொண்டுள்ளது.
> வன உரிமைச் சட்டம் 2006 திறமையாகச் செயல்படுத்தப்படுவதற்கு, வன உரிமை சிறப்புச் சட்டப் பிரிவின் வாயிலாக ஒரு தேசிய ஆணையம் அமைக்கப்படும். இதற்கென தனி நிதி ஒதுக்கீடும், செயல்திட்டமும் இருக்கும்.
> வன உரிமைச் சட்டப்படி இதுவரை கோரப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் தீர்த்து வைக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்யும். நிராகரிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் ஆறு மாத காலத்துக்குள் மறுபரிசீலனை செய்யப்படும்.
> கிராமக் குழுக்களையும் தன்னாட்சிக் கொண்ட மாவட்டக் குழுக்களையும் அமைப்பதற்கு ஏதுவாக மத்திய பஞ்சாயத்து (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம் 1996 (PESA)க்கு இசைவான வகையில், மாநிலங்கள் சட்டங்கள் இயற்றுவதை உறுதி செய்வதற்கு காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது.
> கல்வி நிறுவனங்களில் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவி புரிவதற்காக ரோகித் வெமுலா சட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம்.
> ரெங்கே ஆணையத்தின் பரிந்துரைகளை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். நாடோடிப் பழங்குடிகள், குற்றப்பரம்பரை நீக்கம் செய்யப்பட்ட பழங்குடிகளின் குழந்தைகளுக்கு இலவச் கல்வியை நாங்கள் வழங்கிவிடுவோம்.
> அரசுப் பணிகளிலும் தனியார் பணிகளிலும் கல்வியிலும் பன்முகத்தன்மையை மேம்படுத்தி அதனைக் கண்காணித்து வருவதற்கென பன்முகத்தன்மை ஆணையத்தை காங்கிரஸ் நிறுவும்.
> இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 15, 16, 25, 26, 28, 29, 30 ஆகியவற்றில் உறுதியளித்துள்ளபடி ஒவ்வொருவரின் நம்பிக்கையையும், மதச் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள உறுதிகளையும் உரிமைகளையும் நாங்கள் மதிக்கிறோம்.
> அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 15, 16, 29, 30 ஆகியவற்றில் உறுதியளித்துள்ளபடி மொழிச் சிறுபான்மையினரு்ககு உறுதியளிக்கப்பட்டுள்ள உரிமைகளை நாங்கள் மதிக்கிறோம். அவற்றை உயர்த்திப் பிடிப்போம்.
> கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்கள், சேவைகள், விளையாட்டு, கலைகள், இன்னும் பிற பிரிவுகளில் வளர்ந்து வருவதற்கான முழுமையான சாதகங்களை சிறுபான்மைப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும், இளைஞர்களும் பெறுவதற்கு ஊக்குவித்து உதவிகள் செய்வோம்.
> கல்வி உதவித் தொகைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதத்தில் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு மவுலானா அபுல்கலாம் ஆசாத் உதவித்தொகையை மீண்டும் கொணர்வோம்.
> சிறுபான்மையினரு்ககுப் பொருளாதார அதிகாரமளித்தல் என்பது இந்தியா தனது ஆற்றலை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படும் ஒரு நடவடிக்கையாகும். சிறுபான்மையினருக்கு வங்கிகள் பாகுபாடின்றி நிறுவனக் கடன்கள் வழங்குவதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.
> கல்வி, சுகாதாரம், அரசு வேலைவாய்ப்பு, பொதுப்பணி, ஒப்பந்தங்கள், திறன் மேம்பாடு, விளையாட்டு, பண்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றில் பாரபட்சமின்றி தங்களுக்குரிய பங்கினை சிறுபான்மையினர் பெறுவதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.
> அனைத்து குடிமக்களையும் போலவே சிறுபான்மையினரும் அவர்களுக்கு விருப்பமான உடைகளை உடுத்திக் கொள்வதையும், விருப்பமான உணவை உண்பதையும், தனிநபர் சட்டங்களைப் பின்பற்றுவதையும் நாங்கள் உறுதி செய்வோம்.
> தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தங்களை நாங்கள் ஊக்குவிப்போம். தொடர்புடைய சமூகங்களின் பங்கேற்புடனும், ஒப்புதலுடனும், மட்டுமே இத்தகைய சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
> அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் இன்னும் அதிகமான மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் உறுதி அளிக்கிறது. இவ்வாறு ‘சம பகிர்வு’ என்ற தலைப்பில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
2006-ல் மன்மோகன் சிங் கூறியது என்ன? - ராஜஸ்தானின் பன்ஸ்வாரா நகரில் பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசும்போது, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துகளை பறித்து முஸ்லிம்களுக்கு மறுபங்கீடு செய்யும்” என்றார். கடந்த 2006-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி இதைக் கூறியிருந்தார்.
கடந்த 2006 டிசம்பர் 9-ல் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் மன்மோகன் சிங் தனது உரையில், “எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கான திட்டங்கள் புத்துயிர் பெறுவது அவசியம். வளர்ச்சியால் ஏற்படும் பலன்களில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் சமமான பங்கு பெறுவதை உறுதிப்படுத்த புதுமையான திட்டங்களை நாங்கள் தீட்ட உள்ளோம். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்” என்றார்.
மன்மோகன் சிங்கின் இந்த உரை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து 2006, டிசம்பர் 10-ம் தேதி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட விளக்கத்தில், “வளங்கள் மீதான முதல் உரிமை என்பது முஸ்லிம்களை மட்டும் குறிப்பிடவில்லை. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினரையும் குறிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT