Published : 13 Apr 2018 07:47 AM
Last Updated : 13 Apr 2018 07:47 AM
போக்குவரத்துக்கு உதவும் ஐஆர்என்எஸ்எஸ் - 1ஐ செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி - சி41 ராக்கெட் நேற்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சென்றடைந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துக்கு இணையான ‘நாவிக்’ (Navic) எனப்படும் போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு உதவும் தொழில்நுட்பத்தை சொந்தமாக உருவாக்க இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக கடந்த 2013-ம் ஆண்டு ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ என்ற செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து, அந்த வரிசையில் 6 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. இந்த 7 செயற்கைக் கோள்களின் உதவியுடன் துல்லியமான பல தகவல்கள் பெறப்படும். பொதுமக்கள், ராணுவம், விமானப் போக்குவரத்துக்கு தேவையான போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இத்தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தச் சூழலில், முதலில் அனுப்பப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ செயற்கைக் கோளில் இருந்த ருபீடியம் அணு கடிகாரத்தில் பழுது ஏற்பட்டது. அதனால் மற்றொரு செயற்கைக் கோளை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐஆர்என்எஸ்எஸ் - 1எச் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்து, 1,425 கிலோ எடை கொண்ட ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைக் கோளை பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதற்கான பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. ராக்கெட் புறப்படுவதற்கான 32 மணிநேர கவுன்ட்-டவுன் கடந்த 10-ம் தேதி இரவு 8.04 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4.04 மணிக்கு, தீப்பிழம்பை கக்கியபடி பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஏவுதளத்தில் உள்ள கட்டுப்பாட்டு அரங்கில் இருந்தவாறு இஸ்ரோ தலைவர் கே.சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் கணினி மூலமாக ராக்கெட்டின் நகர்வை தொடர்ந்து உற்றுநோக்கினர்.
செயற்கைக் கோளை சுமந்து செல்லும் ராக்கெட்டின் பாகங்கள், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டபடி 4 நிலைகளில் பிரிந்து கீழே விழுந்தன. சரியாக, ராக்கெட் புறப்பட்ட 19.29-வது நிமிடத்தில் பூமியில் இருந்து 281.5 கி.மீ. தொலைவில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட வட்டப் பாதையில் செயற்கைக் கோள் நிலைநிறுத்தப்பட்டது. பின்னர், செயற்கைக் கோளில் இருந்த சோலார் பேனல்கள் விரிவடைந்ததும் உறுதி செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள இஸ்ரோவின் செயற்கைக் கோள் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து, ஐஆர்என்எஸ்எஸ் - 1ஐ செயற்கைக் கோளை இயக்க முடிவதையும் விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.
தொடர்ந்து, இந்த செயற்கைக் கோளை செலுத்தும் திட்டத்தின் தலைவர் ஆர்.ஹாட்டனை இஸ்ரோ தலைவர் கே.சிவன் கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அனைத்து விஞ்ஞானிகளிடமும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். கட்டுப்பாட்டு அரங்கில் அவர் பேசும்போது, ‘‘நாவிக் தொழில்நுட்பத்தை உருவாக்கத் தேவையான 7 செயற்கைக் கோள்கள் தற்போது நம்மிடம் உள்ளன. இந்த நாட்டின் விருப்பத்தை விஞ்ஞானிகள் நிறைவேற்றியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்’’ என்றார்.
இந்தியாவின் சிறந்த ராக்கெட்
பிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் பணியை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 1993-ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. இதுவரை 43 ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 2 திட்டங்கள் தவிர, மற்ற 41 திட்டங்கள் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2008-ல் நிலாவுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திரயான்’ விண்கலம், கடந்த 2013-ல் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட விண்கலம் ஆகியவற்றையும் பிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘போக்குவரத்துக்கு உதவும் ஐஆர்என்எஸ்எஸ் - 1ஐ செயற்கைக் கோளை பிஎஸ்எல்வி - சி41 ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள். நமது இந்த விண்வெளி திட்ட வெற்றியின் பயன்கள் அனைத்தும் சாமானிய மக்களுக்கு வழங்கப்படும். இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவின் இப்பணியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT