Published : 24 Apr 2024 11:10 AM
Last Updated : 24 Apr 2024 11:10 AM
புதுடெல்லி: இந்திய தேர்தல் களத்தில் காரசார விவாதப் பொருளாகியுள்ளது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ‘சொத்துகள் மறுபங்கீடு’ தொடர்பான வாக்குறுதியும் அதன் மீதான பிரதமர் மோடியின் விமர்சனமும்.
கடந்த வாரம் ராஜஸ்தானில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சி இந்துக்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிடும்” என்று விமர்சித்திருந்தார். அதற்கு காங்கிரஸ், இண்டியா கூட்டணிக் கட்சிகள் பரவலாக எதிர்வினையாற்றி வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அயலக பொறுப்பாளரான சாம் பித்ரோடா ‘சொத்துகள் மறுபங்கீடு’ குறித்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கையினை வலியுறுத்திப் பேசியுள்ளார். அவருடைய கருத்துக்கு பாஜக தகவல் தொழில்நுட்பத் தலைவர் அமித் மாளவியா எதிர்வினை ஆற்றியுள்ளார்.
சாம் பித்ரோடா கூறியது என்ன? காங்கிரஸ் அயலக பொறுப்பாளர் சாம் பித்ரோடா சொத்து மறுபங்கீடு குறித்து, “அமெரிக்காவில் வாரிசுரிமை வரி என்று ஒன்று இருக்கிறது. ஒருவருக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகள் இருந்தால் அதில் அவருடைய வாரிசுகள் 45 சதவீதத்தை மட்டுமே உரிமை கோரி பெற முடியும். 55 சதவீதத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். இது சுவாரஸ்யமான வரி.
“நீங்கள் உங்கள் வாழ்நாளில் சொத்து சேர்த்திருக்கலாம். நீங்கள் இறக்கும்போது உங்கள் சொத்துகளில் பாதியை மக்களுக்காக விட்டுச் செல்ல வேண்டும்” என்பதே அச்சட்டத்தின் சாராம்சம். இது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.
இந்தியாவில் அப்படி ஏதும் இல்லை. ஒருவருக்கு ரூ.100 கோடி மதிப்பில் சொத்து இருந்தால் அத்தனையும் வாரிசுகளையே அடையும். இதுபோன்ற விஷயங்களை விவாதிக்க வேண்டும். நாங்கள் சொத்துகளை மறுபங்கீடு செய்வது பற்றி பேசும்போது புதிய கொள்கைகளை, திட்டங்களை மனதில் கொண்டு பேசுகிறோம். அவை நிச்சயமாக அதீத பணக்காரர்களுக்கானது மட்டுமாக இருக்கக் கூடாது என்று யோசிக்கிறோம்.
சொத்து மறுபங்கீடு என்பது கொள்கை சார்ந்த விஷயம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னர் அது தொடர்பான கொள்கைகளை வரையறுக்கும். உதாரணத்துக்கு, இந்தியாவில் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் என்று ஏதும் இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரும். அதுதான் சொத்து மறுமதிப்பீடு என்பது.
வசதி படைத்தவர்கள் அவர்களின் வீட்டுப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்களுக்கு போதிய ஊதியம் வழங்குவதில்லை. ஆனால் துபாய், லண்டனில் சுற்றுலாவுக்கு அவ்வளவு செலவழிக்கிறார்கள். சொத்து மறுப்பங்கீடு என்றால் ஒரு சேரில் அமர்ந்து கொண்டு இவ்வளவு பணம் இருக்கிறதா அதை எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்கிறேன் என்று செய்யும் செயல் அல்ல. அப்படி நினைப்பது முட்டாள்தனம்.” எனக் கூறியிருக்கிறார்.
அமித் மாள்வியாவின் எதிர்வினை: சாம் பித்ரோடாவின் இந்த கருத்து தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அமித் மாளவியா, “காங்கிரஸ் இந்த தேசத்தை அழிக்க முடிவு செய்துவிட்டது. இப்போது சாம் பித்ரோடா 50 சதவீத வாரிசுரிமை வரி பற்றி பேசுகிறார். அப்படியென்றால் நாம் நமது கடின உழைப்பு மூலம் உருவாக்கும் சொத்தில் 50 சதவீதம் எடுத்துக் கொள்ளப்படும். நாம் செலுத்தும் வரிகளுக்கு அப்பால் இதுவும் எடுத்துக் கொள்ளப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது நடக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT