Published : 24 Apr 2024 06:43 AM
Last Updated : 24 Apr 2024 06:43 AM
புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திஹார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். டைப்-2 நீரிழிவு நோயாளியான அவருக்கு இன்சுலின் ஊசி வழங்க சிறை நிர்வாகம் மறுத்ததாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து கேஜ்ரிவாலை சிறையில் கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதை திஹார் சிறை நிர்வாகம் மறுத்துள்ளது.
இதனிடையே, தனது குடும்ப மருத்துவருடன் காணொலி முறையில் ஆலோசிக்க அனுமதி கோரிடெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
அதேநேரத்தில் கேஜ்ரிவாலுக்கு ரத்தத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இன்சுலின் ஊசி அவசியமா என்பதை ஆய்வு செய்யவும், அவரது பிற உடல்நல பிரச்சினைகளை பரிசோதிக்கவும் சிறப்பு மருத்துவக்குழு ஒன்றை அமைக்குமாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கேஜ்ரிவாலுக்கு இன்சுலின்: இந்நிலையில், கேஜ்ரிவாலுக்கு நேற்று முன்தினம் இரவு, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் கேஜ்ரிவாலுக்கு சர்க்கரை அளவு 320-ஐ தாண்டியதால் அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
அர்விந்த் கேஜ்ரிவால் சிறை சென்ற பின்னர் அவருக்கு செலுத்தப்படும் முதல் இன்சுலின் ஊசி இது என்பது குறிப்பிடத்தக்கது. கேஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டதை திஹார் சிறை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி 2 யூனிட்டுகள் இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டதாக திஹார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுபானக் கொள்கை ஊழல்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால், தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவல் நேற்று முடிந்தது.
இதையடுத்து அவர்களது நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி இருவரும் மே 7-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT