Published : 24 Apr 2024 05:25 AM
Last Updated : 24 Apr 2024 05:25 AM
புதுடெல்லி: பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான லாலுவுக்கு ஏழு மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி ராப்ரி தேவியும் பிஹார் முதல்வராக இருந்துள்ளார்.
இந்தமுறை மக்களவைத் தேர்தலில் லாலுவின் மூத்த மகளான மிசா பாரதியும், இரண்டாவது மகளான ரோஹினி ஆச்சார்யாவும் போட்டியிடுகின்றனர். இச்சூழலில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார், கத்தியார் தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தபோது லாலுவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்து பேசினார்.
இதுகுறித்து லாலுவின் பெயரை குறிப்பிடாமல் நிதிஷ் குமார் பேசுகையில், “சமீப காலமாக சிலர் அனைத்தும் தமக்கு வேண்டும் என விரும்புகின்றனர். தனது பதவிபறிபோனால் தமது மனைவிமார்களை அதில் அமர்த்தி விடுகின்றனர்.
இப்போது அவர்களின குழந்தைகளும் வளர்ந்து விட்டனர். அதிலும் அவருக்கு பல குழந்தைகள். இவ்வளவு அதிகமான குழந்தைகளை எவரும் பெற்றுக் கொள்வது அவசியமா? இவர்கள் குடும்ப அரசியலையும் வளர்க்கின்றனர். இப்போது அவரது மகன், மகள் என பலரும் அரசியலில் இறங்கி விட்டனர்” என்று கூறியிருந்தார்.
மவுனம் சாதிப்பது ஏன்? இதுகுறித்து செய்தியாளரின் கேள்விக்கு லாலுவின் மகனான தேஜஸ்வி யாதவ் பதில் அளிக்கும்போது, “எங்களது மதிப்பிற்குரிய முதல்வர் நிதிஷ் எதை சொன்னாலும் அது எங்களுக்கான ஆசீர்வாதமாகவே கருதுவோம். ஏனெனில், அவர் வயதிலும் மூத்தவர்.
ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசுவதால், பொதுமக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இதுபோல், பேசுவதை விடுத்து அவர் மக்களுக்கான சேவைகள் குறித்து பேச வேண் டும். பல வருடங்களாக ஆட்சியில் இருக்கும் இவர், வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை, வளர்ச்சி, விலைவாசி உயர்வு குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?” என்றார்.
பிஹாரில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜேடியு 16, பாஜக 17, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 5, ஜிதன்ராம் மாஞ்சியின் எச்ஏஎம் 1 தொகுதி என்ற எண்ணிக்கையில் போட்டியிடுகின்றன. இண்டியா கூட்டணியில் ஆர்ஜேடி 26, காங்கிரஸ் 9, சிபிஐ (எம்எல்) 3, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT