Published : 23 Apr 2024 09:38 PM
Last Updated : 23 Apr 2024 09:38 PM
ஜெய்ப்பூர்: “பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை குறைத்து, அதை இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சி செய்தது” என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
ராஜஸ்தானின் டோங் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பட்டியலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை மதத்தின் அடிப்படையில் நிறுத்தவோ, பிரிக்கவோ அனுமதிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தனது உரை ஒன்றில், நாட்டின் வளங்களை பெறுவதில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை என்று தெரிவித்திருந்தார். இது ஒரு தற்செயல் நிகழ்வு இல்லை. இது வெறும் அறிக்கை மட்டும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமே வாக்கு வங்கியும், சமரச அரசியலும்தான்.
கடந்த 2004-ம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் முதலில் செய்த விஷயங்களில் ஒன்று ஆந்திராவில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை குறைத்து, அதை இஸ்லாமியர்களுக்கு வழங்கியதுதான். அது ஒரு சோதனை முயற்சித் திட்டம். பின்பு அதனை நாடு முழுவதும் செயல்படுத்த காங்கிரஸ் விரும்பியது. 2004 முதல் 2010-ம் ஆண்டு வரை நான்கு முறை இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் முயற்சித்தது. ஆனால், சட்டத் தடைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் விழிப்புணர்வு காரணமாக காங்கிரஸ் கட்சியின் எண்ணம் ஈடேறவில்லை.
அந்தத் திட்டத்தை, கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அமல்படுத்த முயற்சி செய்தது. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான உரிமைகளைப் பறித்து, அதை மற்றவர்களுக்கு அளிக்கும் விளையாட்டை அக்கட்சி செய்தது. அரசியல் அமைப்பு மற்றும் பி.ஆர்.அம்பேத்கரை குறித்து அக்கறை இல்லாமல், காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அதனைச் செய்தது” என்று பிரதமர் மோடி பேசினார்.
மேலும், “பாஜகவுக்கு வாய்ப்பு கிடைத்ததும் கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி-யிடமிருந்து எடுத்து காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 2020-ல் முடிந்து விட்டது. நான் தான் அதனை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்தேன்.
நேற்று முன்தினம் ராஜஸ்தானில் நான் சில உண்மைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினேன். காங்கிரஸ் கட்சியானது உங்கள் சொத்துகளை எக்ஸ்ரே செய்யும் என அதன் தலைவர் கூறுகிறார். உங்களின் சொத்துகள் மற்றும் பெண்கள் அணியும் நகைகளை கணக்கெடுப்பதாகவும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். உங்களுக்கு இரண்டு வீடுகள் இருந்தால்கூட, அவர்கள் எக்ஸ்ரே செய்து ஒரு வீட்டைப் பறிப்பார்கள்.
இப்படியாக, மக்களின் சொத்துகளைப் பறித்து காங்கிரஸ் தனது ஸ்பெஷல் ஆட்களுக்கு விநியோகிக்க சதி செய்கிறது என்ற உண்மையை நான் வெளிப்படுத்தினேன். இதனால், ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியும் பீதியடைந்துள்ளது. அவர்களின் அரசியலை நான் அம்பலப்படுத்தியபோது, அவர்கள் என்னை திட்டும் அளவுக்கு கோபமடைந்தார்கள். எதிர்க்கட்சியினர் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள்? காங்கிரஸ் ஏன் தனது கொள்கைகளை மறைக்க விரும்புகிறது?
நீங்கள் மறைத்ததை நான் அம்பலப்படுத்தியதும், நீங்கள் பயத்தில் நடுங்குகிறீர்கள். மேலும், இதனை வெளிப்படுத்தியதும் காங்கிரஸுக்கு என் மீது அதிக வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், என்னை வசைபாடத் செய்யத் தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் முழுமையாக மூழ்கியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை அளிப்பேன் எனக் கூறியது உண்மை. அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன்.
காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஹனுமன் சாலிசாவை கேட்பதும், நம்பிக்கையைப் பின்பற்றுவதும் குற்றமாகிவிட்டது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் ஹனுமன் சாலிசாவைக் கேட்டதற்காக ஓர் ஏழை இரக்கமின்றித் தாக்கப்பட்டார்.
ராஜஸ்தானிலும் ராமநவமி ஊர்வலத்தில் கற்கள் வீசியவர்களுக்கு காங்கிரஸ் அரசு பாதுகாப்பு வழங்கியது. அதுபோன்ற ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பின்னர் மாநிலத்தில் பாஜக ஆட்சி ஏற்பட்டதும் நம்பிக்கைகளை கேள்வி கேட்கும் தைரியம் யாருக்கும் எழவில்லை. இப்போது நீங்கள் அமைதியான முறையில் ஹனுமன் சாலிசாவை சொல்லலாம், ராமநவமியைக் கொண்டாடலாம். இது பாஜகவின் உத்தரவாதம்.
2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்திராவிட்டால், ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது கற்கள் எறியப்பட்டிருக்கும். இந்திய ராணுவ வீரர்களின் தலைகளை வெட்ட எதிரிகள் எல்லை தாண்டி வந்திருப்பார்கள், அங்கு தொடர் குண்டுவெடிப்புகள் நடந்திருக்கும்.
நாட்டின் பிரச்சினைகளில் ஊழலுக்கான புதிய வாய்ப்புகளை காங்கிரஸ் கட்சி கண்டறிந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் நீங்கள் காங்கிரஸின் பிடியில் இருந்து உங்களை விடுவித்து கொண்டிருக்கிறீர்கள். காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட காயங்களை ராஜஸ்தான் மக்கள் அவ்வளவு எளிதாக மறக்கமாட்டார்கள். நான் அம்பேத்கரை மதித்து வணங்கும் நபர். அரசியல் சானத்துக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் கடைசி தேர்தல் பிரச்சாரப் பேரணி இது. அங்கு வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.26) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT