Published : 02 Apr 2018 09:35 AM
Last Updated : 02 Apr 2018 09:35 AM
உச்ச நீதிமன்றத்தில் நீதி என்பது எப்படி கிடைக்கிறது என்பது வெறும் பார்வைக்குரியது மட்டுமல்ல, கேட்பதற்குரியதும் கூட என்று கோரி சட்டக்கல்வி மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு செய்துள்ளனர்.
அதாவது உச்ச நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணை விவரங்கள் மக்களுக்கும், மனுதாரர்களுக்கும் ஊடகங்களுக்கும் வெளிப்படையாக குழப்பம், தவறுகளில்லாமல் சென்றடையவேண்டும் என்பதற்காக பெரும் பொருட்செலவில் மைக் அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன, ஆனால் அதனை நீதிபதிகள் பயன்படுத்துவதேயில்லை. இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று மிக அவசியமான இந்தப் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘விசில் ஃபார் பப்ளிக் இண்டரெஸ்ட்’ என்ற பேனரின் கீழ் இந்த பொது நல மனு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டம் பயிலும் மாணவர்களாக உச்ச நீதிமன்ற வழக்குகளில் தங்கள் அனுபவங்களிலிருந்து பார்த்ததை வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் இருக்கும் மைக்குகள் சிலவேளைகளில் ஆஃப் செய்யப்படுவது குறித்து கவலையடைந்து கோர்ட் நடைமுறைகள் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் மக்களுக்குக் கேட்க வேண்டும் என்று இந்த பொதுநல மனுவை மேற்கொண்டனர்.
மைக்கை ஆஃப் செய்வது என்பது பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரியவேண்டும் என்ற உரிமையை மீறுவதாக உள்ளது. எனவே இந்த பொதுநல மனு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்த பொதுநல மனுவுக்குத் தூண்டுகோலாக இருந்த சட்ட மாணவர் கபில்தீப் அகர்வால், வழக்கறிஞர்கள் குமார் ஷானு, பராஸ் ஜெய்ன் ஆகியோர் இது தொடர்பாக தகவலுரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலைக் காட்டி, நீதிமன்ற அறைகளில் மைக்குகள் சுமா ரூ.91 லட்சம் செலவில் வைக்கப்பட்டுள்ளது, இது வரிசெலுத்துவோரின் பணம். இப்படியிருக்கையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மனுதாரர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு நீதிபதிகள் என்ன பேசுகிறார்கள் என்று காதில் விழுவதில்லை.
குறிப்பாக நாட்டை உலுக்கும் உணர்வுபூர்வமான வழக்குகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வலுவான வழக்குகள் நடைபெறும்போது நீதிபதிகள் பேசுவது ஒருவருக்கும் கேட்பதில்லை என்ற நிலை நீடித்து வருகிறது.
நிர்மாணிக்கப்பட்ட மைக் சிஸ்டங்களை பயன்படுத்தாதது கோர்ட் நடைமுறைகளை அறிவதற்கான மக்களின் அரசியல் சட்ட உரிமையை தடுக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 145(4), குடிமை நடைமுறைச் சட்டம் பிரிவு 153பி. குற்ற நடைமுறைச் சட்டப்பிரிவு 327 ஆகியவற்றின் படி பொதுமக்களுக்கு கோர்ட்டில் என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரியவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
எனவே மைக் சிஸ்டத்தை புறக்கணிப்பது கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை மீறுவதாக உள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்தில் நடப்பதை ஊடகவியலாளர்கள் பொதுமக்களுக்குக் கொண்டு செல்வதைத் தடுப்பதுமாகும் என்று பொதுநல மனுவில் தெரிவித்துள்ளனர்.
“டிஜிட்டல் ஊடகங்கள் பெருத்து விட்ட நிலையில் நாட்டின் முக்கியமான வழக்குகள் குறித்து ஊடகங்கள் உடனுக்குடன் செய்திகளை வழங்க வேண்டிய நிலை உள்ளது, மைக்கைப் பயன்படுத்தாமல் முணுமுணுவென்று பேசுவது தவறான செய்திகளை மக்களிடம் அவர்கள் கொண்டு போய்ச் சேர்க்கும். அப்படி தவறாகச் செய்திகளைக் கொண்டுபோனாலும் கோர்ட் அவமதிப்பு வழக்கு அவர்கள் மீது பாயும். ஆகவே தவறான செய்திகள் தவறுதலான ரிப்போர்ட்டிங்கினால் மக்களிடம் சென்றடையக் கூடாது என்று விரும்பினால் பெரும் செலவில் வைக்கப்பட்டுள்ள மைக்கைப் பயன்படுத்துவது அவசியம்” என்கிறது இந்த பொதுநல மனு.
இது தொடர்பாக டிசம்பர் 11, 2017-ல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஊடகவியலாளர்களிடம் மேற்கொண்ட சந்திப்பில் கோர்ட் நடைமுறைகள் காதில் விழுவதில்லை என்ற பிரச்சினை முன் வைக்கப்பட்டதை இந்த பொதுநல மனு தற்போது எடுத்தாண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT