Published : 23 Apr 2024 06:06 PM
Last Updated : 23 Apr 2024 06:06 PM
புதுடெல்லி: “இண்டியா கூட்டணியில் இணையாது விலகியிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை பாஜக தேர்ந்தெடுக்கிறது. இதன்மூலம், பாஜகவின் ‘பி டீம்’ ஆக பகுஜன் சமாஜ் கட்சி செயல்படுவது நூறு சதவீதம் உறுதியாகி உள்ளது” என்கிறார் அம்ரோஹா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் டேனிஷ் அலி.
டேனிஷ் அலி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரின்போது மக்களவையில் பேசிய பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி, அம்ரோஹா தொகுதி பகுஜன் சமாஜ் எம்.பி டேனிஷ் அலியை தரக்குறைவாக விமர்சித்ததாக புகார் எழுந்தது. அப்போது, டேனிஷ் அலிக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ரமேஷ் பிதூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இந்த விவகாரம் பெரிதான நிலையில் டேனிஷ் அலி மீது பகுஜன் சமாஜ் கட்சி நடவடிக்கை எடுத்தது. டேனிஷ் அலி கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை இடைநீக்கம் செய்தது பகுஜன் சமாஜ் கட்சி. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த டேனிஷ் அலி, காங்கிரஸ் சார்பில் அம்ரோஹா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது: “இந்தத் தேர்தலில் என்னையும், இண்டியா கூட்டணியையும் வீழ்த்த பகுஜன் சமாஜ் கட்சியும், பாஜகவும் ஒன்றாக கைகோத்துள்ளதை மக்கள் நன்கு அறிவார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை (மாயாவதி) தனது கொள்கையில் இருந்து விலகி வெகு தூரம் சென்றுவிட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சி எந்த அடிப்படை நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அதிலிருந்து விலகிச் சென்றுவிட்டது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பாஜக தலைவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றப்போவதாக கூறி வருகின்றனர். ஆறு முறை எம்.பியாக இருந்த ஆனந்த்குமார் ஹெக்டேவே இதை கூறியிருக்கிறார்.
இண்டியா கூட்டணியில் இணையாது விலகியிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை பாஜக தேர்ந்தெடுக்கிறது. இதன்மூலம், பாஜகவின் பி-டீமாக பகுஜன் சமாஜ் செயல்படுவது நூறு சதவீதம் உறுதியாகி உள்ளது.
எனவே, ஆபத்தை உணர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியினரும், பட்டியலின அமைப்பைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து வெளியேறி இண்டியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இதில் ஏதாவது தவறு நிகழ்ந்தால், அது நாட்டுக்கு மட்டுமின்றி இடஒதுக்கீட்டுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும்.
நாட்டில் சமூக நீதிக்கான சாம்பியனாக இருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரது தலைமையில் தெளிவான கருத்தியல் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. என்னுடைய அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான பயணத்தில், மிகச் சரியான இலக்கை நான் தற்போது அடைந்திருக்கிறேன். இதுவே என்னுடைய வாழ்க்கையில் இறுதியானது” என்று அவர் கூறினார்.
பின்புலம் என்ன? - நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 75 மாவட்டங்களில் சுமார் 20-ல் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. சராசரியாக சுமார் 22 சதவீதம் முஸ்லிம்கள் உ.பி.யில் உள்ளனர். முராதாபாத், ராம்பூரில் முஸ்லிம் வாக்குகள் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகம். ராம்பூர், பிஜ்னோர், முசாபர்நகர், சஹரான்பூர், அம்ரோஹா, பிஜ்னோர், அலிகர் மற்றும் மீரட் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் வாக்குகள் சுமார் 40 சதவீதம் உள்ளன.
மேலும், 15 மாவட்டங்களில் கணிசமாக உள்ள முஸ்லிம் வாக்குகள் அதன் வேட்பாளர்கள் வெற்றியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டம் காரணமாக, பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் கடந்த முறை பாஜகவுக்கு வாக்களித்தனர். இந்த முறை பொது சிவில் சட்டம், சிஏஏ சட்டம், கர்நாடகா பர்தா தடை விவகாரம், உத்தராகண்ட் மற்றும் டெல்லியின் மதக்கலவரம் உள்ளிட்ட சிலவற்றால் அவர்களை யோசிக்க வைத்துள்ளது. எனவே, இம்முறை முஸ்லிம்களின் மொத்த வாக்குகள் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதிக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால், இவர்களது லாபத்துக்கான பங்கில் பிஎஸ்பியின் தலைவர் மாயாவதி இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மாயாவதி 11 முஸ்லிம் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதுவரை 42 வேட்பாளர்கள் பெயரை அறிவித்தவர் மீதம் உள்ளவற்றிலும் முஸ்லிம்களை சேர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. முஸ்லிம்களில் இதுவரை சமாஜ்வாதி 3, காங்கிரஸ் 2 வேட்பாளர்களை மட்டும் அறிவித்துள்ளன. இதன் காரணமாக, பிஎஸ்பியின் முஸ்லிம் வேட்பாளர்கள் தம் சமுதாய வாக்குகளை பெறும் சூழல் உள்ளது. இவர்களால் உறுதியாக வெல்ல முடியாத நிலை இருப்பதால், அதனால், பிரியும் வாக்குகள் பாஜக வேட்பாளர்களுக்கு சாதகமாகும் என அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT