Published : 23 Apr 2024 03:27 PM
Last Updated : 23 Apr 2024 03:27 PM

“ப.சிதம்பரம் எண்ணம் ஒருபோதும் பலிக்காது” - சிஏஏ விவகாரத்தில் அமித் ஷா உறுதி

புதுடெல்லி: "தங்கள் வாக்கு வங்கியை குறிவைத்தே காங்கிரஸ் சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய விரும்புகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியை மக்கள் நன்கு புரிந்துகொண்டதால், ப.சிதம்பரத்தின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பிரச்சாரம் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்’ என்று கூறினார். இது தொடர்பாக பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "1960-களில் இருந்தே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆயுதமாக சமரச அரசியலை காங்கிரஸ் செய்து வருகிறது. இதற்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். 2014-ல் பிரதமர் மோடி மக்கள் மத்தியில் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திக்க தொடங்கினார். அன் அடிப்படையில் தற்போது நாட்டில் தேர்தல் நடந்து வருகிறது.

ஆனால், வளர்ச்சியை மையப்படுத்தி தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சிரமப்படுகிறது. இதனால், அக்கட்சி தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைகிறது. எனவேதான் மீண்டும் ஒருமுறை சமரச அரசியலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை முன்னெடுத்துச் செல்ல காங்கிரஸ் கட்சியினர் விரும்புகிறார்கள். அதனடிப்படையில் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

சிஏஏவின் குறைபாடுகள் என்ன என்பதை ப.சிதம்பரம் கூறவில்லை. மாறாக, சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறுகிறார். ஏனென்றால், தங்களின் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை வலுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அதற்காக இப்படி கூறுகிறார்கள். ஆனால், மக்கள் காங்கிரஸ் கட்சியை நன்கு புரிந்து கொண்டதால், சிதம்பரத்தின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

தனது கொள்கைகளில் பாஜக உறுதியாக நிற்கிறது. இந்த விவகாரத்தில் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டோம். அதேநேரம், எந்தவித சமரசமும் செய்ய மாட்டோம். சிஏஏ சட்டத்தில் காங்கிரஸுக்கு என்ன ஆட்சேபனை இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. சிஏஏ சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. எனவே, சமரச அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ப.சிதம்பரத்தின் எண்ணம் ஒரு போதும் பலிக்காது என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை. சிஏஏ சட்டம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்போவதும் இல்லை. சிஏஏ சட்டம் தொடர்ந்து இருக்கும் என்றும், மேலும் மூன்று குற்றவியல் சட்டங்களும் அமல்படுத்தப்படும் என்றும் இந்திய மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மூன்று ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கும். அதேபோல், ஒவ்வொரு அகதிக்கும் குடியுரிமை கிடைக்கும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை" என்று அமித் ஷா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x