Published : 22 Apr 2024 04:07 PM
Last Updated : 22 Apr 2024 04:07 PM

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் புகார்

சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறி வெறுப்பு பேச்சுக்களை பேசியதாக பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் புகார் அளித்துள்ளது.

ராஜஸ்தானில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்... “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்றார். அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது" என்று கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டங்களை தெரிவித்து வரும் வேளையில், இந்தப் பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் புகார் அளித்துள்ளது.

அந்தப் புகாரில், "பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை திசை திருப்பும் வகையில் பேசியுள்ளார். மோடி குறிப்பிடுவது போல, நாட்டின் சொத்தின் மீது முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று மன்மோகன் சிங் அரசு எங்கும் கூறவில்லை. ஆனால், மோடி அதனை திரித்து பொய்யை பரப்பி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி நாட்டின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்ற தெளிவான நோக்கத்துடன் இந்துக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள் என முஸ்லிம்களை சித்தரிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்துப் பெண்களிடம் உள்ள தங்கங்களை முஸ்லிம்களுக்கு விநியோகம் செய்வதாக எங்கும் கூறப்படவில்லை. ஆனால், அப்படி விநியோகம் செய்யப்படும் என்று மோடி பொய் சொல்லியுள்ளார்.

மோடியின் இந்த பேச்சு வைரலாக பரவி நாட்டின் அனைத்து பகுதிகளையும் சென்றடைந்துள்ளது. இந்த உரை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே பதற்றத்தையும் பகைமையையும் உருவாக்குவதோடு, முஸ்லிம்களை ஊடுருவல்காரர்களாகவும் எதிரிகளாகவும் பார்க்க இந்துக்களை தூண்டுகிறது. பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறியுள்ளார். எனவே மோடியைக் கண்டித்து, அவரது பிரச்சாரத்துக்குத் தடை விதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x