Published : 22 Apr 2024 12:14 PM
Last Updated : 22 Apr 2024 12:14 PM

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்...” - மோடியின் பேச்சும், ராகுல் காந்தி எதிர்வினையும்!

ஜெய்ப்பூர்: "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் செல்வம் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும்" என்று ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே வார்த்தைப் போருக்கு வித்திட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார்... “நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை” என்றார். அப்படியானால் யாருடைய சொத்துகளை பறித்து யாரிடம் கொடுப்பீர்கள்?! சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ஊடுருவல்காரர்களுக்கே போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? நம் பெண்கள் எவ்வளவு தங்கம் மற்றும் வெள்ளி வைத்திருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கணக்கிடும். தங்கம் ஒரு பெண்ணின் சுயமரியாதை. ஒரு பெண்ணின் தாலியின் மதிப்பு தங்கத்தின் விலையில் மட்டுமல்ல, அவர்களின் கனவுகளுடன் தொடர்புடையது. ஒரு பெண்ணின் தாலியை பறிப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது" என்று ஆவேசமாக கூறினார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்வினை ஆற்றியுள்ளது. மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “முதல்கட்ட வாக்குப்பதிவில் ஏமாற்றம் கிடைத்த பிறகு, பொய்கள் பலன் தராததால் தோல்வி பயத்தில் மக்களை திசை திருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் மோடி. காங்கிரஸின் புரட்சிகர தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, “இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. யாருடைய சொத்தும் பறிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறவில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது பேச்சில், வளர்ச்சியின் பலன்களில் சிறுபான்மையினர் சமமாக பங்கு பெறும் வகையில் புதுமையான திட்டங்களை தீட்ட வேண்டும் என்றே குறிப்பிட்டார்” என்று தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்து அல்லது முஸ்லிம் என்ற வார்த்தை எங்காவது எழுதப்பட்டுள்ளதா என்பதை பிரதமர் மோடியால் காண்பிக்க முடியுமா, சவால் விடுக்கிறேன் அவருக்கு. அவரால் காண்பிக்க முடியுமா?. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர் ஆகியோருக்கான நீதியைப் பற்றி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

பாஜகவுக்கும் தன் தரப்புக்கு பிரதமர் மோடிக்கு ஆதரவாக, 2006-ல் மன்மோகன் சிங் பேசியதாக சொல்லப்படும் விஷயங்கள் அடங்கிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x