Published : 21 Apr 2024 10:31 PM
Last Updated : 21 Apr 2024 10:31 PM
போபால்: அதானி மற்றும் அம்பானிக்கு தேசத்தின் சொத்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். “நமது நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வசம் மிகப்பெரிய சலவை இயந்திரம் உள்ளது. முன்பு துணிகளை சலவை செய்ய இயந்திரம் பயன்படுத்துவது குறித்து நான் கேள்விப்பட்டுள்ளேன்.
ஆனால், அமித் ஷாவிடம் உள்ள இயந்திரம் சில அரசியல் பிரமுகர்களை சலவை செய்கிறது. இதுவரை அவர் வசம் உள்ள இயந்திரம் 27 பேரை சலவை செய்துள்ளது.
இதுதான் மோடி மற்றும் அமித் ஷாவின் அரசு. மீண்டும் அவர்கள் ஆட்சி அமைத்தால் தேசத்தில் ஜனநாயகம் முடிவுக்கு வரும் என்பதை நான் உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஏப்ரல் 19-ம் தேதி அன்று 102 தொகுதிகளில் நடைபெற்ற முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சியை வசைபாடுவது மட்டுமே பாஜக அறிந்த ஒரே விஷயம். அரசியலமைப்பை மாற்றி அமைப்போம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்லி வருகிறார். ஆனால், அம்பேத்கர் மீண்டும் வந்தாலும் அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க முடியாது என மோடி சொல்கிறார்.
பொதுத்துறை நிறுவனங்கள், விமான நிலையங்கள் உட்பட தேசத்தின் சொத்துகள் அனைத்தும் அதானி மற்றும் அம்பானி என இரண்டு பேருக்கு மட்டுமே விற்கப்படுகிறது. மோடியும், அமித் ஷாவும் அதனை விற்பவர்கள்” என கார்கே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT