Published : 21 Apr 2024 05:01 PM
Last Updated : 21 Apr 2024 05:01 PM
புதுடெல்லி: சாதி வெறியை அழித்து, ஒவ்வொரு குடிமகனின் மேம்பாட்டிற்காக பிரதமர் மோடி பாடுபட்டுள்ளார் என்றும், ஏழைகளின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை அவர் கொண்டு வந்துள்ளார் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிஹாரில் (ஏப்., 21) இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஷா, “பிரதமர் மோடி சாதி வெறியை அழித்து, ஒவ்வொரு குடிமகனின் மேம்பாட்டிற்காக பாடுபட்டுள்ளார். ஏழை மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.
இன்று லாலு பிரசாத் யாதவும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து பாஜக மற்றும் ஜேடியு-க்கு எதிராக தேர்தலில் போட்டியிடுகின்றன. லாலு-ராப்ரி ஆட்சியில் பிஹார் கேங்ஸ்டர் (காட்டாச்சி - jungle raj ) ராஜ்ஜியமாக மாற்றப்பட்டது. இன்று லாலு காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ்தான், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை எதிர்த்தது. அதோடு மண்டல் கமிஷன் அறிக்கையையும் எதிர்த்தது என்பதை நான் அவரிடம் (லாலு பிரசாத் யாதவ்) சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஓபிசிகள் அனைவரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால் நிதிஷ் முதல்வர் என்டிஏ கூட்டணிக்கு வந்து, முதல்வர் ஆனதுக்கு பிறகு பல கொடுமைகள் நிறுத்தப்பட்டன. நிதீஷ் குமார் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் வழங்கியுள்ளார்.
ஆனால் இண்டியா கூட்டணி மீண்டும் அவர்களை ராந்தல் விளக்கு காலத்துக்கு இழுத்துச் செல்ல விரும்புகிறது. அதோடு ஓபிசிக்களை ஒடுக்க நினைக்கிறது.
மோடி நக்சலிசத்தை ஒழித்தார், பயங்கரவாதத்தை ஒடுக்கினார். ஓபிசி பிரிவை சேர்ந்த நரேந்திர மோடியை பாஜக தான் முதன்முதலாக பிரதமராக்கியது. ஒரு டீ விற்றவரின் மகனை பிரதமராக்கியுள்ளது. 80 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கியுள்ளோம். 12 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன, 10 கோடிக்கும் அதிகமான தாய்மார்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT